யார் இந்த புஸ்ஸி ஆனந்த்..? எம்.எல்.ஏ முதல் தவெக பொதுச்செயலாளர் வரை..!

 
1 1

தமிழக வெற்றிக் கழகம் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் தேர்தலிலும் தவெக தீவிரம் காட்டி வருகிறது.இம்மாநிலத்தை பொறுத்தவரை மொத்தம் 30 தொகுதிகள் இருக்கும் நிலையில், 16 இடங்களை கைப்பற்றும் கட்சியே தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும். தற்போது இங்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதில் என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு புஸ்ஸி ஆனந்த் முயற்சித்தார். இவர் பிறந்து வளர்ந்தது புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தான். எனவே இம்மாநில அரசியலை நன்கு அறிந்தவர். மேலும் விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கத்தில் முன்னணி நபராக திகழ்ந்து கொண்டே, மறுபுறம் கள அரசியலிலும் கவனம் செலுத்தினார். புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் 2006 சட்டமன்றத் தேர்தலில் புஸ்சி தொகுதியில் போட்டியிட்டு முதல்முறை எம்.எல்.ஏ ஆனார்.

இதன்மூலம் என்.ஆனந்த் என்ற பெயருடன் புஸ்சி என்ற பெயரும் சேர்ந்து கொண்டது. அதன்பிறகு கட்சியில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வெளியேறி 2011 தேர்தலில் உப்பளம் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதே உப்பளம் தொகுதியில் 2016 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதன்பிறகு நடிகர் விஜய் உடன் தொடர்ச்சியாக இயங்கி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளராக தற்போது பதவி வகித்து வருகிறார்.

இத்தகைய சூழலில் தான் என்.ஆர்.காங்கிரஸ் உடன் தவெக கூட்டணி வைக்க காய் நகர்த்தினார். ஆனால் ரங்கசாமி உடன்படவில்லை. புதுச்சேரியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பாஜக உடன் இருந்தால் தான் சாத்தியம். இதுதவிர வேறு சில அரசியல் கணக்குகளும் இருப்பதால் தவெக கோரிக்கையை நிராகரித்துவிட்டார். எனவே 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தவெக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இக்கட்சி சார்பில் புஸ்சி அல்லது உப்பளம் தொகுதியில் போட்டியிடுவதற்கு என்.ஆனந்த் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதேபோல் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜுனாவும் புதுச்சேரியில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.