அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதல்வர் வழங்கிய பரிசுப்பெட்டகத்தில் என்ன இருக்கிறது?
அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு சார்பில் 'தடம்' என்ற பெட்டகம் பரிசாக அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் கைவினைக் கலைஞர்களால் உருவான பொருட்களை ஸ்டார்ட்அப் தமிழ்நாடு திட்டத்தின்கீழ், நவீன சமுதாயத்தில் அறிமுகம் செய்வதற்கான புதிய முயற்சியே ‘தடம்’. கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் கைவண்ணத்தில் உருவான பொருட்களை முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசாக அளித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளித்த ”தடம்” பெட்டகத்தினுள் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதை தெரிந்துகொள்வோம்.
- திருநெல்வேலியில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை
- விழுப்புரத்தைச் சேர்ந்த டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை)
- நீலகிரியிலிருந்து தோடா எம்பிராய்டரி சால்
- பவானியிலிருந்து பவானி ஜமுக்காளம்
- புலிகாட்டிலிருந்து பனை ஓலை ஸ்டாண்ட்
- கும்பகோணத்திலிருந்து பித்தளை விளக்கு
பழங்கால கைவினைப் பொருள்களை சமகால தமிழர் பண்பாட்டுடன் இணைப்பதன் மூலம் அவற்றை உயிர்ப்புடன் வைத்திருப்பதே ஸ்டார்ட்அப் தமிழ்நாடு திட்டத்தின் முதன்மை நோக்கம்.
இதன்மூலம் பவானியின் ஜமுக்காளம் நெசவாளர்கள் முதல் கள்ளக்குறிச்சியின் டெரகோட்டா கைவினைக் கலைஞர்கள் மற்றும் நீலகிரியின் தோடா எம்பிராய்டரி கலைஞர்கள் வரை, சிறு சிறு சமூகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்துள்ளனர்.
அதேபோல் கைவினைக் கலைஞர்களை பன்னாட்டு சந்தைகளுடன் இணைத்து, தமிழ்நாட்டின் பண்பாட்டை உலகளவில் கொண்டு செல்ல இத்திட்டம் உதவுகிறது.