நூலிற்கான விலையினை குறைக்க வேண்டும் - ஈபிஎஸ் வலியுறுத்தல்!!

 
EPS

நூலிற்கான விலையினை குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூலாகும்.  நூலின் பங்கு ஆடை தயாரிப்பில் இன்றியமையாததாக இருந்து வருகிறது.  இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நூல் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் ஆடை தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தமிழகத்தில் 45 சதவீத நூற்பாலைகள் கோவை ,திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து கடந்த 10 மாதங்களில் அனைத்து நூல் ரகங்களும் ஒரு கிலோவிற்கு 120 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. முக்கியமாக இந்த நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அனைத்து நூல்களும் ஒரு கிலோவிற்கு அதிரடியாக 50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

weaving

 ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலவாணியை இந்தியாவிற்கு ஈட்டித்தரும் டாலர் சிட்டி திருப்பூரில் நாட்டின் 60 சதவீத பின்னலாடைகள் உற்பத்திகள் செய்யப்படுகின்றன. நூல் விலை உயர்வினால் ஏற்கனவே எடுத்த ஆர்டர்களை முழுமையாக செய்து முடிக்க முடியாமலும்,  புதிய ஆர்டர்கள் பெற முடியாமல் திண்டாடி வருகின்றனர்.  எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் கோவை,திருப்பூர், ஈரோடு ,நாமக்கல் ,சேலம் மாவட்டங்களில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி கூடங்கள் இந்த விலை உயர்வினால் இயங்க முடியாத சூழ்நிலையில் தடுமாறி வருகின்றன.  நூலில் பல ரகங்கள் உள்ளன.  கடந்த ஓரிரு மாதங்களில் நூலின் விலையையும் நவம்பர் முதல் வாரத்தில்  முக்கியமான நூல் ரகங்களின் விலை உயர்வும் எவ்வளவு என்று ஊடகங்கள் நாளிதழ்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.


இந்த விலை உயர்வு கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களிடமும்,  பின்னலாடை உற்பத்தி செய்யும் தொழில் முனைவோரிடமும் மிகுந்த அதிருப்தியும் , தங்களது தொழில் எதிர்காலத்தைப் பற்றிய ஐயத்தையும் எழுப்பியுள்ளது.  விலை உயர்வுக்கு முக்கிய காரணம் பதுக்கல், இறக்குமதி வரி உயர்வு மற்றும் செயற்கை தட்டுப்பாடு என்று கூறுகின்றனர்

weaving
எனவே முக்கிய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கைத்தறி மற்றும் விசைத்தறி சங்கத்தினர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் போன்ற முக்கிய சங்கங்களை அழைத்து பேசி அவர்களது குறைகளை போக்கவும், இறக்குமதியை குறைக்கவும், மூலப்பொருள் ஏற்றுமதியை தடை செய்யவும், நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ,மூலப் பொருட்களான பஞ்சு மற்றும் நூல் ஆகியவற்றை வைத்து இருப்பதை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நூலிற்கு மானியம் வழங்க வேண்டும் என்றும் நூல் மற்றும் பஞ்சுக்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும் என்றும் விலையில்லா வேட்டி, சேலை தயாரிப்பதற்கான நூலினை நெசவாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.