"கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலை"- தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்ய கோரிக்கை
சென்னை ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலம் சுவாதீனம் எடுக்கப்பட்டு விட்டதாகவும் சம்பந்தப்பட்ட தாசில்தாரர் நிலத்தை தோட்டக்கலை துறை வசம் ஒப்படைத்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருவாய் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குத்தகை பாக்கி 730 கோடி ரூபாய் செலுத்தாததை அடுத்து, சென்னை ரேஸ் கிளப்–புக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தது. ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சென்னை ரேஸ் கிளப்–புக்கு குத்தகைக்கு விடப்பட்ட 160 ஏக்கர் நிலத்தை அரசு சுவாதீனம் எடுத்துக் கொண்டதா? நிலம் தோட்டக் கலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டதற்கு ஆவண ஆதாரங்கள் உள்ளதா? என நீதிபதி டீக்காராமன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு வருவாய் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், குத்தகையை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி நிலம் சுவாதீனம் எடுக்கப்பட்டு விட்டதாகவும், பின் சம்பந்தப்பட்ட தாசில்தாரர் நிலத்தை தோட்டக்கலை துறை வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, திருத்தியமைக்கப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தின்படி, விதிமீறல் இருந்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், கிளப்–பில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ரேஸ் கிளப் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமயாஜி, நிலம் இன்னும் ரேஸ் கிளப் வசம் தான் இருப்பதாகவும், ஆயிரம் பணியாளர்கள் இன்னும் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். நிலத்தை அரசு சுவாதீனம் எடுத்துக் கொண்டதாக கூறப்படும் வாதம் தவறானது எனவும் தெரிவித்தார்.இந்த வழக்கின் வாதம் நிறைவடையாததால் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்து நீதிபதி டீக்காராமன் உத்தரவிட்டார்.