"இந்த வீடு கடனில் உள்ளது" என வீட்டின் சுவற்றில் பெயிண்ட்டால் எழுதிய நிதி நிறுவன ஊழியர்கள்
வீட்டுக் கடனில் இரண்டு தவணைகள் செலுத்த தவறியதால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடன் வாங்கியவர் வீட்டில் அராஜகம் செய்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (34).தென்காசியை சொந்த ஊராகக் கொண்ட இவர் கடந்த 2010-ம் ஆண்டு பிழைப்புக்காக திருப்பூர் வந்துள்ளார்.திருப்பூர் அருகே அண்ணாநகர் பகுதியில் சொந்தமாக பனியன் கம்பனி வைத்து நடத்தி வரும் சோமசுந்தரம் அவிநாசியை அடுத்து கந்தம்பாளையம் பகுதியில் சொந்தமாக வீடு கட்ட திட்டமிட்டு கடந்த 2017-ம் ஆண்டு, திருப்பூர் DHFL (DIWAN HOUSING FINANCE LIMITED) தனியார் நிதி நிறுவனத்தில் 30 வருடம் மாதம் ரூ.16,457 தவணை என்ற அடிப்படையில் ரூ.20,80,000 வீட்டுக்கடன் பெற்று வீடு கட்டியுள்ளார்.
சோமசுந்தரம் தவறாமல் தவணை செலுத்தி வந்த நிலையில், DHFL நிதி நிறுவனத்தை கடந்த 2022-ம் ஆண்டு PCHFL (PIRAMAL CAPITAL AND HOUSING FINANCE LIMITED) நிதி நிறுவனம் வாங்கியுள்ளது. இதையடுத்து மாற்றப்பட்ட நிர்வாகம் சோமசுந்தரத்தின் வீட்டுக் கடனை மறுசீரமைத்து மாதத் தவணையை ரூ.19,750 - ஆக நிர்ணயித்துள்ளது. அதன்படி, மாதம் ரூ.19,750 தவணை செலுத்திவந்துள்ளார் சோமசுந்தரம். மேலும், சொந்த நெருக்கடி காரணமாக கடந்த ஜனவரி மற்றும் மே மாதம் என இரு தவணைகள் மட்டும் கட்ட முடியாமல் போனது. கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 8-ம் தேதி தவணை செலுத்தியுள்ளார். தவறிய இரு தவணைகளில் ஒரு தவணையையாவது கடந்த 6-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நிதி நிறுவன ஊழியர்கள் சோமசுந்தரத்திற்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். குறிப்பிட்ட தேதிக்குள் அந்த ஒரு தவணை தொகையை கட்ட முடியாமல் சோமசுந்தரம் தவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தனியார் நிதி நிறுவன ரீஜினல் மேனேஜர் ஹரீஸ் உட்பட நான்கு பேர் கொண்ட ஊழியர்கள் கடந்த 8-ம் தேதி சோமசுந்தரத்தின் வீட்டிற்கு வந்து, வீட்டில் இருந்த பெண்களை அச்சுருத்தும் வகையில் மிரட்டிப் பேசியதோடு, வீட்டுச் சுவரில் பெயிண்டில் பெரிய எழுத்துகளாக "PCHFL கடனில் உள்ளது" எனவும், சொத்து சுவாதீன அறிவிப்பு என்ற தலைப்பில் தவணை கட்ட தவறியதால் தனியார் நிதி நிறுவனம் சுவாதீனம் செய்வதாக எச்சரிக்கை விடுத்த வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனரை வீட்டின் சுவற்றில் ஒட்டி அத்துமீறி அராஜகம் செய்துள்ளனர்.இரு தவணைகளுக்காக தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அராஜகம் செய்வதை கண்டு அதிர்ச்சியடைந்த சோமசுந்தரம் சந்தேகமடைந்து ஆன்லைனில் தனது வீட்டுக் கடன் குறித்து தேடிய போது அவருக்கு பேரிடி காத்திருந்தது கண்டு நிலை குலைந்துபோயுள்ளார் சோமசுந்தரம். முப்பது வருட தவணையாக இருந்த தனது வீட்டுக்கடன் தனக்கு தெரியப்படுத்தாமலேயே 82 ஆண்டுகளுக்கு கடன் காலத்தை உயர்த்தியுள்ளது. இதன்படி 20,80,000 ரூபாய் கடனானது 82 ஆண்டுகளில் சுமார் ஒரு கோடியே எண்பது லட்சம் ரூபாயாக இருக்கும் எனவும் இது மிகப்பெரிய ஸ்க்கேம் (SCAM) ஆக இருக்கிறது, இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து முறைப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சோமசுந்தரம் தனியார் நிதி நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ததை அடுத்து தற்போது 40 ஆண்டுகளாக தவணைக்காலத்தை குறைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.இந்நிலையில் கடந்த 8-ம் தேதி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் சோமசுந்தரம் வீட்டுச் சுவரில் அத்துமீறி கடன் குறித்து எழுதி, அவமதித்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வீடு கட்ட ஏங்கித் தவிக்கும் நடுத்தர வர்க்கத்தை குறிவைத்து தனியார் நிதி நிறுவனங்கள் எளிய வழிமுறையில் வீட்டுக் கடன்களை வாரி வழங்கி வலையில் விழவைத்து, பின் அவர்களின் வாழ்நாள் முழுதுமான ஒட்டுமொத்த உழைப்பை சுரண்டி எடுக்கும் வகையில் அராஜகமாக நடப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அரசு தலையிட்டு உடனடியாக முறைப்படுத்த வேண்டும் என அப்பாவி நடுத்தர மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.