"தீப திருநாளில் விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றிய பிரதமருக்கு நன்றி" - சசிகலா

 
sasikala

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற பிரதமர் மோடிக்கு சசிகலா நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , "நம் இந்திய பிரதமர் நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ,குறிப்பாக அனைத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, எந்தவித அரசியல் கவுரவமும் பார்க்காமல், பெருந்தன்மையோடு 3 புதிய சட்டங்களையும் வாபஸ் பெற்றுள்ளதற்கு , தமிழக மக்களின் சார்பாக முதற்கண் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

sasi

தமிழக விவசாயிகளும், பிற மாநிலங்களை சேர்ந்த அனைத்து விவசாயிகளும், கடந்த ஒரு வருட காலமாக போராடினார்கள்.  இந்த போராட்டத்தில் எந்தவித சாதி சமய பேதம் இல்லாமல், மொழி வேறுபாடின்றி ஒருமித்த கருத்தோடு ஒருங்கிணைந்து, போராடிய விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டு இருப்பது உண்மையிலேயே மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.

'கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி' என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளுக்கு வடிவம் கொடுக்கும் விதமாக. உலக நாடுகள் எல்லாம் திரும்பிப் பார்க்கும் வகையில். நம் இந்திய திருநாட்டில் வேளாண்மையில் புதிய புரட்சி ஏற்பட்டு .விரைவில் வல்லரசாகும் என்பது உறுதி. புரட்சித் தலைவியும் இதே கொள்கையை மனதில் வைத்து .விவசாயிகளின் உரிமைக்காக .தன் இறுதி மூச்சு வரை போராடினார் என்பதை இந்த நேரத்தில் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

modi

மேலும் விவசாயிகள் ,விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்தி விவசாயத் துறையில் நிலவும் இடர்பாடுகள் களையப்படும் என்று நம் பிரதமர் குறிப்பிட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. அதே சமயம் கடந்த ஓர் ஆண்டாக நடைபெற்ற போராட்டங்களில் தங்கள் இன்னுயிரை நீத்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும்  உரிய இழப்பீடு வழங்கவும், மேலும் அவர்கள்  மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இந்த தீப திருநாளில் விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றிய நம் பிரதமருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.