‘விபத்தில்லா பயணம்’... அரசு பேருந்துக்கு கிடாய் வெட்டி வழிபட்ட கிராம மக்கள்!
சத்தியமங்கலம் அருகே பாதுகாப்பான பயணத்திற்கு நன்றி தெரிவிக்க அரசு பேருந்துக்கு கிடாய் வெட்டிய பயணிகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் பேருந்து பணிமனையில் இருந்து தினமும் காலை 6:40 மணிக்கு சத்தியமங்கலத்தில் இருந்து திருப்பூர் வழியாக தேனி வரை செல்லும் அரசு பேருந்தானது பண்ணாரி, ராஜன்நகர், பசுவபாளையம், கொத்தமங்கலம், பவானிசாகர், பனையம்பள்ளி ஆகிய கிராமங்கள் வழியாக புளியம்பட்டி சென்றடைகிறது. அங்கிருந்து திருப்பூர் சென்று திண்டுக்கல் வழியாக தேனி சென்றடைகிறது. இவ்வழிப் பேருந்தில் தினமும் மேற்கண்ட கிராமங்களில் இருந்து தினமும் சுமார் 56 பயணிகள் தங்களது வாழ்வாதாரத்திற்காக, 15 ஆண்டுகளாக இந்த பேருந்தில் பயணித்து, திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு செல்கின்றனர்.
சரியான நேரத்திற்கு இந்தப் பேருந்து தினமும் வருவதாலும், பாதுகாப்பான, மகிழ்ச்சியான பயணம் அமைந்ததாலும், இவர்கள் அனைவரும் திருப்பூருக்கு வேலைக்கு செல்வதற்கு மிகுந்த உதவியாக இருக்கின்ற காரணத்தால், இந்த 56 பயணிகளும் சேர்ந்து, கண் திருஷ்டிக்காக, இந்த பேருந்திற்கு நன்றி செலுத்தும் விதமாக, இன்று ஆடி மாத கிடாய் வெட்டினார்கள். 56 பயணிகளும் சேர்ந்து கிடாய் ஒன்று வாங்கி, அரசு பேருந்துக்கு மாலை அணிவித்து, வாழைமரம் கட்டி, டயர்களுக்கு சந்தனமிட்டு, உள்பகுதியில் பலூன்களை கட்டியும் பேருந்து முன்பு பூஜை நடத்தி, இன்று காலை அரசு பேருந்துக்கு கிடாய் வெட்டினர். பெண்கள் பொங்கல் வைத்து, சாமியை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியை கண்டு பொதுமக்கள் வியப்படைந்தனர். கிடாய் வெட்டி அங்குள்ள ஏழைகளுக்கு விருந்து படைத்தனர்.