GOAT படத்தில் விஜயகாந்த்.. அரசியலில் விஜய்க்கு சீனியர் என் மகன் தான் - விஜய் குறித்து பிரேமலதா ருசிகர தகவல்..

 
பிரேமலதா விஜயகாந்த்

GOAT படத்தில் விஜயகாந்த் AI தொழில்நுட்பத்தில் சிறப்புக்காட்சியில் வரவுள்ளதாகவும், எனது மகன் விஜய பிரபாகரன்தான், தனக்கு அரசியலில் சீனியர் என விஜய்  கூறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் பிறந்து 71 ஆண்டுகள் நிறைவானதை கொண்டாடும் வகையில் 71 டாட்டு கலைஞர்களால் 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்தின் முகம் வலது கையில் டாட்டுவாக போடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த சாதனை கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ள நிலையில், டாட்டு போடும் நிகழ்வை தேமுதிக  பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டார்.  

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “கேப்டனின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு டாட்டூ போடும் நிகழ்வு நடைபெறுகிறது. கேப்டன் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை தேமுதிக அலுவலகத்தில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. அதேபோல் எம்.ஜி.ஆர் பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு கேப்டன் நினைவிடத்தில் வைத்து ரூ.50 ஆயிரம்  வழங்க இருக்கிறோம். 

விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து

அந்தியூரில் செருப்பு கூட போடாமல் மலைவாழ் மக்களுக்கு நடந்து சென்று உதவி செய்த வரும் அப்புசாமி என்பவருக்கு இரு சக்கர வாகனம் வழங்கப்பட இருக்கிறது. மேலும்,  தமிழ் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட இருக்கிறது. நாளை காலை 8 மணி இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்பட உள்ளது. மேலும், பல முக்கியம் விசியங்களும் நாளை அறிவிக்கப்பட உள்ளது. கேப்டன் இல்லாத முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. அவர் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மன வலியோடு தான் இதை கொண்டாடுகிறோம்.

விஜய்-யின் தமிழக வெற்றிக் கழக கட்சிக்கொடி அறிமுகத்திற்கு முன்பாக வீட்டிற்கு வந்து கேப்டனுக்கு விஜய்  மரியாதை செலுத்தினார். கேப்டனின் ஆசிர்வாதத்தை வாங்கி சென்றார். விஜய்க்கு தேமுதிக சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தமிழக வெற்றிக் கழக கொடி விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. அரசியல் என்றாலே சர்ச்சைகள்தான். அந்த சர்ச்சைகளை சவால்களை முறியடித்து தான் வெற்றி பெற முடியும். இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறது இதுபோன்று பல சர்ச்சைகளை சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அதுதான் அரசியல். விஜய் புத்திசாலி அமைதியான பையன். நிச்சயமாக இதையெல்லாம் சமாளிப்பார் என்று நம்புகிறேன்.

திரை உலகில் விஜய் நிறைய சவால்களை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறார்.  அரசியலை சினிமா போன்று எடுத்துக் கொள்ள முடியாது. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் யோசித்து எடுத்து வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய அறிவுரை. விஜய் உடனான சந்திப்பு நட்புணர்வோடு நடைபெற்ற ஒரு சந்திப்பு. 2026 ஆம் ஆண்டு அரசியலுக்காக அல்ல. விஜய் எங்களுக்கு புதிது கிடையாது. எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் சாலிகிராமத்தில் தான் பல ஆண்டுகளாக இருந்தார். கேப்டனுக்கும், எஸ்.ஏ.சி. க்கும் இடையேயான நட்பு புதிது இல்லை. விஜய் எப்பொழுதும் எங்கள் வீட்டிற்கு வருவது போன்று. எங்கள் வீட்டுப்பிள்ளை போன்று தான் வந்துள்ளார்.  

Image

விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் உடன் விஜய் ஜாலியாக பேசினார். சினிமா உலகில் நீங்கள் தான் எங்களுக்கு முன் உதாரணம் என சண்முக பாண்டியன் கூறினார். அப்பொழுது அரசியலில் எனக்கு விஜய பிரபாகரன் தான் சீனியர் என்றும் பத்திரிகையை நன்றாக சமாளிக்கிறீர்கள் என்றும் கூறினார். ஒரு குடும்ப சந்திப்பு போன்று தான் அது அமைந்தது.

கோட் திரைப்படத்தில் AIதொழில்நுட்பத்தில் கேப்டன் வருகிறார் என்பதை வெங்கட் பிரபு ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறார். அந்த வகையில் அவர்கள் நேரில் வந்து கேப்டனை திரைப்படத்தில் பயன்படுத்த அனுமதித்ததற்கு நன்றி தெரிவித்து சென்றனர். திரைப்படம் வெளியானதும் நீங்கள் குடும்பத்தினரோடு வந்து படம் பார்க்க வேண்டும் என்றும் உங்களுக்கென சிறப்புக் காட்சியை வைத்துள்ளேன் என்றும் விஜய் கூறினார். கண்டிப்பாக வந்து பார்ப்போம் என கூறினேன். கேப்டன் வரும் காட்சி மிகப் பிரம்மாண்டமாக வந்துள்ளதாக விஜய் மகிழ்ச்சியாக கூறினார். அவருக்கு என் வாழ்த்துகள்.

திமுக கடவுள் இல்லை இல்லை என்று சொல்கிறார்கள் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துகிறார்கள். மக்களோடும் தெய்வத்தோடும் தான் கூட்டணி என சொல்லி அரசியலுக்கு வந்தவர் கேப்டன் அவர் போன்று உறுதியாக இருக்க வேண்டும். உங்கள் நேரத்துக்கு தகுந்தார் போல் மாற்றி பேசுவதை மக்கள் நிச்சயமாக ஏற்க மாட்டார்கள்.  வெளிநாட்டிற்கு சென்று உண்மையிலேயே முதலீடு ஈர்த்து அதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைத்தால் தேமுதிக தான் முதலில் வாழ்த்து சொல்லும் ஏற்கனவே பல நாடுகளுக்கு சென்றுள்ளார். ஆனால் எத்தனை நிறுவனங்கள் இங்கு வந்துள்ளது என்ற கேள்வி எழுகிறது. முதலீடுகளை ஈர்க்க முதல்வருக்கு வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கிறேன்." என்று தெரிவித்தார்.