தேமுதிக போல் எந்த அரசியல் கட்சியும் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த முடியாது- விஜய பிரபாகர்
தமிழக வெற்றிகழக முதல் மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்த விஜய பிரபாகர், தேமுதிக நடத்தியது போல் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த முடியாது என தெரிவித்தார்.
தேமுதிகவின் 20-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்காக அவரது மகன் விஜய பிரபாகர் உதகைக்கு வந்தார். நீலகிரி மாவட்டத்தில் உதகை அருகே உள்ள சோலூர், தலைக்குந்தா , உதகை மத்திய பேருந்து நிலையம், காந்தல் , போன்ற பகுதிகளில் கட்சி கொடியினை ஏற்றி வைத்த அவர் பின்னர் காந்தல் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகர், “தமிழகத்தில் தேமுதிக கட்சி நடத்தியது போல் முதல் மாநாட்டை எந்த கட்சியும் நடத்தியதில்லை. தேமுதிகவின் முதல் மாநாடு ஏற்படுத்திய தாக்கம் அளவுக்கு, தவெக.வின் முதல் மாநாடு ஏற்படுத்துமா என தெரியவில்லை. 1500 கிலோ மீட்டர் தூரம் வரை முதல் மாநாட்டிற்கு வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு அன்று தமிழகமே மதுரையை நோக்கி பார்த்தது. மாநாட்டில் சுமார் 35 லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடந்த பின்பே தவெக மாநாடு குறித்து கருத்து கூற விரும்புகிறேன். தமிழக வெற்றிக்கழகம் நடத்தும் முதல் மாநாட்டிற்கு அண்ணன் விஜய்க்கும் கட்சித் தொண்டர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார்.