திமுக செயல்திட்டங்களை சினிமா வசனத்தோடு பேசியிருக்கார் விஜய்.. புதுசா ஒன்னுமில்ல..!! - தா.மோ.அன்பரசன்..

 
அமைச்சர் அன்பரசன் விஜய்

த.வெ.க தலைவர் விஜய் புதிதாச  ஒன்னும் சொல்லவில்லை எனவும்,  திமுக செயல்திட்டத்தை சினிமா வசனத்துடன் பேசியுள்ளார் என்றும், இதுபோல் புதுசா வருபவர்களை எத்தனை பேரை பார்த்து இருக்கோம் என  அமைச்சர் தா.மோ.அன்பசரன் தெரிவித்துள்ளார். 

 சென்னை மாநகராட்சிக்குட்பட்ட  ஆலந்தூர் 12 வது மண்டலத்தில்  ஆதம்பாக்கம் ஏரிகால்வாயின் குறுக்கே மேடவாக்கம் பிரதான சாலை - ஜீவன் நகரை இணைக்கும் வகையில் ரூ.5 கோடி மதிப்பில் புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய பாலத்தை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,  ரிப்பன் வெட்டி பொது மக்களின் பயன்பாட்டிற்காக நேற்று திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது  சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், மண்டலகுழு தலைவர் சந்திரன், மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். 

#TVKMaanaadu திராவிட மாடல் ஆட்சி என ஏமாற்றுகிறார்கள்: விஜய்

நிகழ்ச்சிக்குப் பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், “2 ஆண்டுகளுக்கு முன்னர் நலச்சங்கத்தினர் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.  அதுபோல் ஆலந்தூர் தொகுதி ஆதம்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதியில் 100 கோடி மதிப்புள்ள மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளது” என்றார். 

அப்போது அவரிடம்,  த.வெ.க தலைவர் விஜய் மாநாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “த.வெ.க தலைவர் விஜய் புதிதாக ஒன்றும் சொல்லவில்லை.  திமுக செயல்திட்டங்களை  சினிமா வசனத்துடன் பேசியுள்ளார். இதுபோன்று  புதுசா வருபவர்கள்  எத்தனை பேரை நாங்கள் பார்த்திருக்கிறோம்” என்று கூறினார்.