‘தவெகவில் சாதி பார்த்து பதவி’- 25 வருட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி திமுகவில் இணைந்தார்

தவெகவில் சாதி பார்த்தும், பணம் கொண்டவர்களுக்கு மட்டுமே பதவி அளிக்கப்படுகிறது என ஆதங்கத்தால் 25 வருட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஆனந்தகுமார் என்பவர் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதுதொடர்பாக ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவருக்கும் வணக்கம்...கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் தளபதியார் அவர்களின் பெயரால்
16 வயதிலிருந்து இன்று 41 வயது வரை 25 ஆண்டுகளாக அடிப்படை உறுப்பினரில் இருந்து 17 ஆண்டுகள் நகர தலைவராகவும், 3 ஆண்டுகள் சட்டமன்ற பொறுப்பாளராகவும் இருந்தேன் தளபதி அவர்கள் புதிய அரசியல் கட்சி தொடங்கியதால் இப்போது ஈரோடு மாவட்டம் 3 மாவடமாக பிரிக்கப்படுகிறது என்பதால் அதில் கோபி மற்றும் பவானிசாகர் அகிய இரண்டு தொகுதிகள் ஈரோடு மேற்கு மாவட்டமாக பிரிக்கப்படுவதால் உழைப்பு மற்றும் அனுபவத்தில் மூத்தவன் என்கிற முறையில் மாவட்ட செயலாளர் பொறுப்பு கேட்டு விருப்பமனு வழங்கியிருந்தேன், பணபலம் மற்றும் சமூகத்தை காரணம் காட்டி எனக்கான பொறுப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.
இந்த தகவல் 10 நாட்களுக்கு முன்னரே எனக்கு தெரிய வந்ததால் எனது உழைப்பிற்கான அங்கீகாரமாக மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காவிட்டால் கட்சியில் வேறு எந்த பொறுப்பும் வேண்டாம் என்றும் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்துகொள்கிறேன் என்றும் கடிதம் எழுதி மாவட்ட பொறுப்பாளர் மற்றும் மாநில செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி விட்டேன். இதை தளபதியாரின் பார்வைக்கு கொண்டு சென்றார்களா இல்லையா என்று தெரியவில்லை இதற்கு மேலும் அந்தக் கட்சியில் நான் தொடர்ந்து உழைத்தால் அதற்கான அங்கீகாரம் கிடைக்காது என்கிற காரணத்தாலும், நான் ஏதோ பணம் பெற்றுக்கொண்டு விட்டுக்கொடுத்து விட்டதாக எனது உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் களங்கம் ஏற்படும் என்ற காரணத்தினாலும் தளபதியார் அவர்களின் தொண்டனாக மட்டுமே இருந்து கொண்டு கட்சிப்பணி எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்க முடிவெடுத்துள்ளேன். நான் பொறுப்பிலிருந்த காலகட்டங்களில் எனக்கு உறுதுணையாக இருந்த கழக தோழர்கள் அனைவரும் தலைமைக்கு கட்டுப்பட்டு தலைமை அறிவித்திருக்கும் நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நான் வணங்கும் தெய்வம் தளபதியார் அவர்களூக்கு ஒரு வேண்டுகோள் நான் விருப்பமனு கொடுத்திருக்கும் போது என்னை அழைத்து நேர்காணல் வைக்காதபோதே உங்கள் பார்வைக்கு எனது விருப்பமனுவும் கடிதமும் கொண்டுவரப்படவில்லையோ என்று சந்தேகிக்கிறேன்.
இதுபோல் அநீதி உங்களுக்காக உன்மையாய் உழைத்தவர்களுக்கு வேறு எந்த மாவட்டத்திலும் நடந்திடாமல் தடுக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.