“25 வருட அனுபவம் கொண்ட மருத்துவர் என் நுரையீரலை எடுத்துவிட்டார்”- விக்னேஷின் தாய் பகீர் தகவல்

 
ச்

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோயியல் துறையில் பணிபுரிந்து வருபவர் மருத்துவர் பாலாஜி. இன்று வழக்கம் போல் பணிக்கு வந்த அவரை சந்திப்பதற்காக வந்த ஒருவர் சரமாரியாக கத்தியால் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.  

முதல் தளத்தில் பணி மருத்துவரின் அறையில் நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து, மருத்துவரின் கூச்சல் சத்தத்தை கேட்டு உதவியாளர் அறையை திறக்க முற்பட்ட போது அறை உள்புறம் தாழ்ப்பாளிடப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் ரத்தக்கரை படிந்த கத்தியுடன் வெளியே வந்த நபரை மருத்துவமனை ஊழியர்கள் பிடித்து சரமாரி அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது. கடந்த 6 மாதமாக அவரது தாய் பிரேமாவிற்கு கலைஞர் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு  சிகிச்சை எடுத்துவந்ததும் தெரியவந்தது. 

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விக்னேஷின் தாய் அளித்த பேட்டியில், “கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் எனக்கு கேன்சர் உறுதி் செய்யப்பட்டது. ஒவ்வொரு முறையும் சிகிச்சைக்கு 20 ஆயிரம் வரை செலவானது. சிகிச்சைக்கு மேலும் 3 லட்சம் ரூபாய் செல்வாகும் என அங்கு கூறியதால் அங்கிருந்து சென்னை அடையாறு மருத்துவமனைக்கு சென்றேன். 95 ஆயிரம் ரூபாய் கட்டி சிகிச்சை பெற்றேன். பின்னர் கிண்டி கலைஞர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றேன். அங்கு பாலாஜி என்ற மருத்துவரே சிகிச்சை அளித்தார். 4 நாட்கள் அங்கு அட்மிட்டாகி சிகிச்சை பெற்றபின் டிஸ்சார்ஜ் ஆனேன். அதன்பின் கீமோ சிகிச்சை பெற்றுவருகிறேன். மருத்துவர் பாலாஜி, படிச்ச திமிரில் எங்களை இங்கிலீஷில் திட்டினார். ”நான் டாக்டரா? நீ டாக்டரா?” என அசிங்கமாக திட்டினார். வயதானவர்களையும் திட்டுகிறார். காலை 10 மணிக்கு சென்ற எனக்கு மாலை வரை சிகிச்சை அளிக்கவில்லை. இப்போது தனியார் மருத்துவமனையில் என்னை காப்பாற்ற முடியாது எனக் கூறிவிட்டனர். 25 வருடம் அனுபவம் உள்ள மருத்துவர் என் உடலில் என்ன பிரச்சனை என ஏன் கண்டுபிடிக்கவில்லை. நான் பிழைக்க மாட்டேன் என மருத்துவர்கள் கூறியதால், என் மகன் இப்படி செய்தானா என தெரியவில்லை. என் மகன் நேரடியாக கத்தியால் குத்தினான், ஆனால் 25 வருட அனுபவம் கொண்ட மருத்துவர் என் நுரையீரலை எடுத்துவிட்டார்” என்றார்.