பிரபல பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!

 
1

பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் 1944, மார்ச் 3-ம் தேதி எர்ணாகுளத்தில் பிறந்தார். அவரது தந்தையை பின்பற்றி இசை பயின்று, அதில் தேர்ச்சி பெற்றார். விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்ற அவர், சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடியதன் மூலம் திரைப்படத்துக்கு பாடும் வாய்ப்பை பெற்றார்.

தமிழில் கடந்த 1973 முதல் திரைப்படங்களுக்கு பாடல் பாடி உள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், பரணி, ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட இசை அமைப்பாளர்களுடன் தமிழில் பணியாற்றி உள்ளார்.

‘மூன்று முடிச்சு’ படத்தில் ‘வசந்த கால நதிகளிலே’, ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ‘வாழ்க்கையே வேஷம்’, அந்த 7 நாட்களில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’, நானே ராஜா நானே மந்திரி படத்தில் ‘மயங்கினேன் சொல்ல தயங்கினேன்’, வைதேகி காத்திருந்தாள் படத்தில் ‘ராசாத்தி உன்ன’, கிழக்கு சீமையிலே படத்தில் ‘கத்தாழங் காட்டு வழி’, மே மாதம் படத்தில் ‘என் மேல் விழுந்த’, பூவே உனக்காக படத்தில் ‘சொல்லாமலே யார் பார்த்தது’, கிரீடம் படத்தில் ‘கனவெல்லாம்’ உள்ளிட்ட பாடல்களை அவர் தமிழில் பாடி உள்ளார். சுமார் 60 ஆண்டுகள் இசை உலகை ஆட்சி செய்த அவர் தற்போது விடைபெற்றுள்ளார். மண்ணுலகை விட்டு அவர் விடைபெற்றாலும் அவரது குரல் என்றும் காற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவரது உயிர் பிரிந்தது.அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.