சகோதரத்துவத்தைப் பேணும் மகத்தான திருவிழா ரமலான் - திருமா வாழ்த்து!!

 
tn

இசுலாமியர் யாவருக்கும் இனிய இரமலான் பெருவிழா வாழ்த்துகள் என்று எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "முப்பது பிறை கண்டு  இரமலான் நோன்பை நிறைவு செய்யும் இசுலாமிய பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசுலாமியர்கள் கடைப்பிடிக்கும் ஐவகை கடமைகளுள் ஒன்றாக இந்த  முப்பது நாள் நோன்பையும் கடைபிடித்து வருகின்றனர். உலகமெங்கும் வாழும் இசுலாமியர் யாவரும்  இரமலான் பண்டிகையை ஒரே வகையான நடைமுறையில் பின்பற்றுவதன் மூலம், தாங்கள் ஒட்டுமொத்தமாக ஒரே சமூகக் குழுவினர் என்னும் உணர்வைப் பெறுகின்றனர்.

tn

மொழி, இனம் ,  நாடு என்னும் அடையாளங்களால் பிளவுண்டு சிதறிக் கிடந்தாலும் இசுலாமியர் என்னும் மதம்சார்ந்த அடையாளத்தால் ஒருங்கிணைந்த ஒரே சமூகமாக உணர்வதற்கான வாய்ப்பை இத்தகைய பண்பாட்டுக் கூறுகள் உருவாக்குகின்றன.  எனவே, இரமலான் பண்டிகை என்பது வெறும் ஆரவாரங்களைக் கொண்ட விழாவாக அமையாமல், ஓர் சமூக ஒழுங்கமைவுக்கான பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டதாக விளங்குவதைக் காணமுடிகிறது. ஆண்டுதோறும் இத்தகைய நோன்பைக் கடைபிடிப்பதன் மூலம்  தனிநபர் ஒழுங்கும் சமூக ஒழுங்கும் சம காலத்தில் ஒருசேர வலிமை பெறுவதையும் காணலாம்.  இத்தகைய ஒழுங்கமைவு இறை நம்பிக்கையுடன் இணைந்த தற்காப்பு மற்றும் தற்சார்பு நம்பிக்கையையும் பெருக்குவதாக அமைகிறது. இசுலாமியருக்கான பண்பாட்டுத் தளத்தில் இரமலான் பண்டிகை என்பது தனிநபர் அளவிலும் சமூக அளவிலும் நல்விளைவுகளை உருவாக்கும் ஒரு மகத்தான 
திருவிழாவாக விளங்குகிறது.அத்துடன், இரமலான் நோன்பு காலத்தில் இந்து உள்ளிட்ட பிற மதங்களைச் சார்ந்தவர்களுடன்  இசுலாமியர்கள் இணக்கமாக இருந்து சகோதரத்துவத்தைப் பேணுவதைத் தங்களின் கடமையாகக் கொண்டுள்ளனர். முப்பது நாட்களிலும் இஃப்தார் நிகழ்வுகளில் இசுலாமியர் அல்லாத பிற மதத்தவரை இணைத்துக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது போற்றுதலுக்குரியது. சகோதரத்துவத்தைப் பேணும் இத்தகைய  உயரிய பண்பாடுதான் சமத்துவத்திற்கான இலக்கை நோக்கி பயணிப்பதற்கு அடித்தளமாக உள்ளது. இதன்மூலம்  இசுலாம் என்பது சகோதரத்துவத்துக்கும் சமத்துவத்துக்குமான ஒரு பண்பாட்டு நெறியாக - வாழ்வியல் கோட்பாடாக விளங்குவதைக் காணமுடிகிறது.  இத்தகைய வாழ்வியல் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் வகையில் இரமலான் நோன்பைக் கடைபிடிக்கும் இசுலாமியர் யாவருக்கும் விசிக சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.