திமுகவை சாய்க்கவோ, ஒழிக்கவோ முடியாது- வைகோ
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை போன்று தற்குறியாக யாரும் இருக்க முடியாது என வைகோ விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை காமராஜர் அரங்கத்தில் மதிமுக சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் அண்ணா குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ மற்றும் ஏராளமான மதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் மூலம் 7000 கோடி மூதலீடுகள் தமிழ்நாடு வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். மூடிவிட்டு சென்ற Ford கம்பெனியை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார். திராவிட இயக்கத்தை காப்பதற்கு திராவிட இயக்கமும், திமுகவும் இணைந்து செயல்படுவதை போல் மதிமுகவும் திமுகவுற்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும். ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் கூறுகிறார்., ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும் திருமாவளவனின் பேச்சு அவருடைய உரிமை.
தமிழ்நாட்டில் இருப்பதை போன்ற மோசமான ஆளுநர் எந்த மாநிலத்திலும் இருந்தது இல்லை. கவர்னர் பதவி தேவையில்லாதது. தமிழ்நாட்டில் உள்ள கவர்னர் ஆர்.என்.ரவியை போன்று தற்குறியாக யாரும் இருக்க முடியாது. மதுவிலக்கு கொள்கையில், டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்பேன் என்றுதான் முதலமைச்சரே தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் எந்த இடையூறு வந்தாலும் அதை தடுக்கின்ற போர் வாளாக மதிமுக இருக்கும். சங்க்பரிவார் கும்பால் திமுகவை சாய்க்கவோ, ஒழிக்கவோ முடியாது” என வைகோ பேசினார்.