நாகையில் வீடுகள் கட்டாமலேயே வடிவேலு பட பாணியில் பல கோடிக்கு மோசடி
நாகை மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் கிணற்றைக் காணோம் என்ற வடிவேல் பாணியில் வீடுகள் கட்டாமலேயே பல கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.
கடந்த 2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் கிணற்றைக் காணோம் என்ற வடிவேல் நகைச்சுவைப் பாணியில் வீடுகள் கட்டாமலேயே பல கோடி ரூபாய் முறையீடு செய்யப்பட்டுள்ள சம்பவம் நாகையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது. பட்டமங்கலம் ஆதமங்கலம் வழிவளம் கோவில் கண்ணாபூர் தெற்குப்பனையூர் கொடியாளத்தூர் லிட்டர் 6 ஊராட்சிகளில் வீடுகள் கட்டாமலேயே பயனாளிகள் பெயரில் நிதி பெறப்பட்டு மிகப்பெரிய மோசடியானது செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 146 வீடுகள் கட்டிக் கொடுக்காமலேயே பயனாளிகள் பெயரில் அதிகாரிகள் பல கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் இருந்து வந்த பொதுப்பணித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்கண்ட ஆறு ஊராட்சிகளிலும் சோதனை பணிகளை இன்று காலை முதல் தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக ஆதமங்கலம் ஊராட்சியில் 49 வீடுகள் கட்டி முடிக்கப்படாமலேயே கட்டப்பட்டதாக நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மயிலாடுதுறை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பால ரவிக்குமார் மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் அருள் பிரியா அடங்கிய குழுவினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் மீதமுள்ள ஐந்து ஊராட்சிகளிலும் மூன்று நாட்கள் இந்த ஆய்வு பணிகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற இந்த மெகா மோசடியில் ஊராட்சி செயலர்கள் ஓவர்சியர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.