டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதற்கு பாராட்டு விழா- மத்திய அமைச்சர் பங்கேற்கிறார்

 
கிஷன் ரெட்டி

மதுரை மாவட்டம் மேலூர் அ.வல்லாளபட்டியில் நாளை மறுநாள் (ஜன.30) நடைபெறும் பாராட்டு விழாவில் மத்திய கனிம வளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பங்கேற்கிறார்.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி, வல்லாளப்பட்டி, நாயக்கன்பட்டி பகுதி அம்பலகாரர்கள், கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடுவதாக, மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, பொதுமக்கள், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மாண்புமிகு மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும் நன்றி தெரிவித்தனர்.

https://x.com/annamalai_k/status/1884258747796935163

கிராம மக்கள் பிரதிநிதிகள் குழு, நமது மாண்புமிகு மத்திய சுரங்கத்துறை அமைச்சர் திரு. கிஷன் ரெட்டியை சந்தித்தபோது, அவரை தங்கள் கிராமத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். தன்னரசு மத்தம் மேலநாடு பொதுமக்கள் மற்றும் அம்பலகாரர்களின் அன்பான அழைப்பை ஏற்றுக்கொண்ட நமது மாண்புமிகு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, வரும் ஜனவரி 30, 2025 அன்று மாலை 4 மணிக்கு, மதுரை அ.வல்லாளப்பட்டிக்குச் சென்று பொதுமக்களை நேரில் சந்திக்கவிருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.