உளுந்தூர்பேட்டை: அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. 2 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து..

 
உளுந்தூர்பேட்டை: அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து..  2 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து..

 கள்ளக்குறிச்சி மாவட்டம்  உளுந்தூர்பேட்டை அருகே  3 கார்கள் மற்றும் ஒரு சுற்றுலா வேன் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே  செங்குறிச்சி பஸ் நிறுத்தம் பகுதியில் இன்று அதிகாலை 3 கார்கள்,  ஒரு சுற்றுலா வேன் என 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்தில் வாகனங்களில் இருந்த  10-க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர். அத்துடன் விபத்துக்குள்ளான 3 கார்களில் ஒரு கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து  இந்த நான்கு வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டதால்,  சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

accident

வாகனங்கள் அனைத்தும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர். உடன் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தினால் அதிகாலையில் சுமார் 2 மணி நேரம் சென்னை -  திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்துக்கள் குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.