துணை முதல்வர் பதவி பெற்ற பின் தாய்மார்களான மகளிரையே சந்திக்க வந்தேன்- உதயநிதி ஸ்டாலின்
ஏதாவது ஒரு பட்டமோ, பரிசோ கிடைத்தால் ஒரு குழந்தை தனது தாயிடம் சென்று காண்பிக்க நினைக்கும், அதுபோல தான் தமிழ்நாடு துணை முதலமைச்சர் என்கிற உயரிய பொறுப்பு ஏற்ற பிறகு தாய்மார்களான மகளிரை சந்திக்க வந்திருக்கிறேன் என மகளிர் சுய உதவிக்குழுக்கள் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
சென்னை சேப்பாக்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான மணிமேகலை விருதுகள்,வங்கியாளர் விருதுகள்,நகர்புற சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 84 ஆயிரத்து 815 கோடி ரூபாய் மட்டுமே வங்கி கடன் இணைப்பாக வழங்கப்பட்டது. 92 ஆயிரம் கோடி ரூபாய் கடந்த 3 ஆண்டு திமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு மணிமேகலை விருது வழங்குவதையும் நிறுத்தி விட்டது. ஆனால் திமுக அரசு வந்தவுடன் விருது வழங்கி வருகிறோம். அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களே மகளிர் மீதுள்ள அக்கறைக்கு சிறந்து எடுத்துக்காட்டு. குழந்தைகளுக்கு காலையில் உணவு வழங்க பெண்கள் சமைக்க கஷ்டப் படக்கூடாது என காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கினார்.
இலவச பேருந்து பயணம்,மகளிர் உரிமை தொகை என பல்வேறு திட்டங்களை மகளிருக்காக திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. இந்தியாவிலேயே மகளிர் மேம்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்கிறது. எல்லா வகையிலும் பெண்கள் மேலே வர வேண்டும் என அரசு மகளிருக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு 35 ஆயிரம் கோடி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்ணயித்த இலக்கை விட அதிக கடன் வழங்கப்படும்” எனக் கூறினார்.