துணை முதல்வர் பதவிக்கு ஈபிஎஸ் சொன்ன தகுதி நிச்சயம் என்னிடம் இல்லை- உதயநிதி ஸ்டாலின்

 
உதயநிதி ஸ்டாலின்

அதிமுக கூட்டணிக்கு வர 20 இடங்களும் ரூ. 100 கோடி சில கட்சிகள் கேட்பதாக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசி உள்ளார். இது தான்  அவர்களின் அவல நிலை. ஆனால் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி கூட்டணியாக உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Image

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற அலுவலகம், திமுக இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகம், துறையூர் பேருந்து நிறுத்தம் அருகே அமைக்கப்பட்டிருந்த கலைஞரின் முழு உருவ சிலை ஆகியவற்றை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர், ரகுபதி, மெய்யநாதன், கோவி.செழியன், பெரம்பலூர் எம்.பி அருண் நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன், ஸ்டாலின் குமார் மற்றும் தி.மு.க வினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கலைஞர் சிலை திறப்பிற்கு பின் நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “துறையூர் பகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக, விளையாட்டு துறை அமைச்சராக பல முறை வந்துள்ளேன். முதன் முறையாக துணை முதலமைச்சராக உங்களுடைய வாழ்த்துக்களை பெற வந்துள்ளேன். அதிலும் கலைஞர் சிலையை திறந்து வைப்பது கூடுதல் மகிழ்ச்சி. அண்ணாவின் சிலை அருகிலேயே கலைஞர் சிலை அமைக்கப்பட்டுள்ளதற்கு பாராட்டுக்கள் தெரிவித்து கொள்கிறேன். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எதற்கெடுத்தாலும் கலைஞர் பெயரை வைக்கிறார்கள் என கேட்கிறார். நல்ல நல்ல திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான் பூச்சி பெயரையா வைக்க முடியும்? உதயநிதிக்கு துணை முதல்வராக என்ன தகுதி இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி கேட்கிறார்? அவர் கேட்கும் தகுதி நிச்சயம் என்னிடம் இல்லை. கூவத்தூரில் மேஜைக்கு அடியில் சென்று பதவி பெற்ற தகுதி எனக்கில்லை. நான்  யார் காலில் விழுந்தும் இந்த பொறுப்புக்கு வரவில்லை.

Image

நான் இளைஞரணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, துணை முதலமைச்சராக என எத்தனை பொறுப்புகள் வகித்தாலும், உங்கள் வீட்டு பிள்ளையாக உங்களில் ஒருவனாக இருப்பதே எனக்கு பெருமை. நாம் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றி பெற்றோம், அதே போல வரும் சட்டமன்ற தேர்தலில் 200 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற  பணியாற்ற வேண்டும். அதிமுக கூட்டணிக்கு வர 20 இடங்களும் ரூ. 100 கோடியும் சில கட்சிகள் கேட்பதாக அக்கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசி உள்ளார். இது தான்  அவர்களின் அவல நிலை. ஆனால் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி கூட்டணியாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்ற பின் நடந்த ஏழு தேர்தல்களிலும் தொடர் வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணி பெற்றுள்ளது. அதேபோல் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கான பணியை இன்றே தொடங்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என அன்ணா மற்றும் கலைஞர் சிலை முன்பு உறுதி ஏற்போம்” என்றார்.