காங்கிரஸை இனி எந்தக் காலத்திலும் சேர்க்கக் கூடாது - உதயநிதி ஸ்டாலின்..!

 
Udhayanidhi

பதவி ஆசைக்காக ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்ற கட்சி காங்கிரஸ். கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு திமுகவினரின் உழைப்புதான் காரணம். காங்.,-க்கு தமிழக மக்கள் நிச்சயம் பாடம் கற்றுக் கொடுப்பார்கள் என தி.மு.க இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் திமுக இளைஞரணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், திமுகவின் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் உள்பட ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பேசிய திமுகவின் இளைஞரணியின் செயலாளரும், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், "நமக்கு மட்டுமே ஏமாற்றமாக இருந்த இந்தத் தேர்தல், இப்போது மக்களுக்கும் ஏமாற்றமாக இருப்பதாக உணர்ந்து உள்ளனர். இந்த ரிசார்ட் கலாச்சாரம் இல்லாத ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் தான். இளைஞரணியைச் சேர்ந்த அனைவரும் தேர்தலுக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக உழைத்துள்ளனர்.

தேர்தல் களத்தில் நாம் தோல்வியடைந்து இருக்கலாம். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மதிப்பு பல மடங்கு கூடியிருக்கிறது. தமிழ்நாட்டில் என்றைக்குமே ரிசார்ட் பாலிடிக்ஸ் செய்யாத இயக்கம் நம்முடைய இயக்கம் தான். இந்த நம்பிக்கையின் காரணமாக நம்மையும், நம் தலைவரையும் யாரும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. பல்வேறு பதவிகள் வரும் போகும். இளைஞரணி நிர்வாகி, கட்சியின் அடிப்படைத் தொண்டன் என்பதில் மிகப்பெரிய பெருமை நமக்கு இருக்கிறது.

நாம் அனைவரும் பிறவி போராளிகள், தேர்தலில் நீங்கள் அனைவரும் செய்த வேலைக்காக ஒரு சகோதரனாக எனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய திட்டங்களை மீறி தமிழ்நாட்டு மக்கள் இந்த முடிவை அறிவித்திருக்கிறார்கள், 17 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற திமுககாரர்கள் தான் காரணம். பதவிக்காக நம்மிடம் சொல்லாமல் ஓடிவிட்டார்கள். தலைவரை சந்தித்து நன்றி கூட தெரிவிக்கவில்லை, இனி எந்த காலத்திலும் அவர்களை நாம் சேர்க்கக்கூடாது. அவர்களுக்கு உண்டான பாடத்தை தமிழ்நாட்டு மக்கள் கற்றுக் கொடுப்பார்கள். நமது முதுகின் மேல் சவாரி செய்த காங்கிரஸ் நமது முதுகில் குத்திவிட்டு சென்றிருக்கிறது. இப்போது தான் தெரிகிறது வட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று. இன்று நம் ஆட்சி இல்லை என்றாலும் நமது திட்டங்கள் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருகின்ற காலங்களில் நான் உங்களோடு இருப்பேன். முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாளை உங்களின் வசதிக்கு ஏற்ப நடத்துங்கள். நிகழ்ச்சிகளில் உங்கள் குடும்பத்தினரை கலந்து கொள்ள செய்யுங்கள்.

இன்று முதலமைச்சர் அறையிலேயே ரீல்ஸ் எடுத்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஆட்சி பொறுப்பேற்று ஏராளமான குற்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் உண்மை முகம் முழுவதுமாக தெரிந்தவுடன் தமிழ்நாட்டு மக்கள் நம் தலைவரை தேடி நிச்சயமாக வருவார்கள். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.

தோல்வி அடைந்ததற்கான காரணங்களை நாம் ஆராய்ந்து முழு கவனமாக செயல்பட வேண்டும், இந்தத் தேர்தலில் சோசியல் மீடியா ஒரு முக்கியமான அங்கம் வகித்திருக்கிறது, வெளியில் அனைவரிடமும் ஓட்டு கேட்டோம். ஆனால் வீட்டில் கேட்காமல் விட்டு விட்டோமோ? என தோன்றுகிறது. உங்கள் வீட்டில் உள்ள நபர்களிடம் முதலில் அரசியல் பழகுங்கள், இளைய தலைமுறைகளிடம் அரசியலைப் பழகுங்கள்.

நமக்கு புது புது களங்கள் காத்துக் கொண்டிருக்கிறது நாம் அதற்கு தயாராக வேண்டும் தலைவர் வழியில் நாம் சிறப்பாக செயல்பட உள்ளோம். இந்த தேர்தலில் சமூக ஊடகம் ஒரு பெரிய பங்களிப்பை வழங்கி இருக்கிறது. இன்றைய ஜென் சி இளைஞர்களுக்கு புரிகின்ற வகையில் நமது கொள்கைகளைக் கொண்டு செல்ல வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இன்ஃபுளுயன்சர்களாக மாற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.