விஜய்க்கு வாழ்த்து சொன்ன உதயநிதி.. மற்றபடி பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை எனவும் திட்டவட்டம்..

 
உதயநிதி ஸ்டாலின்


கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய விஜய்க்கு வாழ்த்துக்கள் என்றும், பாஜகவுடன் கூட்டணி அமைக்க எல்லாம் வாய்ப்பு இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை  பிராட்வேயில் அமைந்துள்ள  பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் ரூ. 25 கோடி  மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கல் பொன்முடி, சேகர் பாபு , மேயர் பிரியா, மற்றும் எம்.பி., தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நூறு வருடத்திற்கு முன்பு பெண்கள் வீட்டின் படிக்கட்டை தாண்ட முடியாத நிலை இருந்தது. தற்போது பெண்கள் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல விளையாட்டுகளில் சாதனை புரிந்து வருகினனர்.  

அடுத்த பிறந்தநாளுக்கு நான் துணை முதல்வரா? உதயநிதி ஸ்டாலின் பதில்

பெண்களுக்காக புதுமைப் பெண்கள் என்ற திட்டத்தின் மூலமாக 3 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர்.  குறிப்பாக தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண்கள் திட்டம் மூலமாக ஆண்டு தோறும் 6 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.  விளையாட்டு பாடவேளை ( பி.இ.டி பீரியடு) வரும் போது கணிதம் மற்றும் அறிவியல் பேராசிரியர்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம்;  பேராசிரியர்கள் மாணவர்களை விளையாட அனுமதியுங்கள்” என்றார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  “ராஜ்நாத் சிங் கலைஞர் நாணயத்தை வெளியிடும் நிகழ்வில் பெருந்தன்மையோடு பங்கேற்றார். அதற்கு நன்றி சொன்னோம்; மற்றபடி கூட்டணி அமைக்க எல்லாம் வாய்ப்பே இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து தலைவர் ஸ்டாலின் தான் முடிவெடுப்பார் என்றார்.  கட்சி கொடி மற்றும் பாடல் வெளியிட்டுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். காலையில் இருந்து வேலையாக இருந்ததால் விஜய்யின் கட்சிப் பாடலை இன்னும் பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்.