டெமோ பைக்கை புதுசு என விற்ற TVS பைக் ஷோரூம்- வாடிக்கையாளர் அதிர்ச்சி
பல்லாவரம் அருகே பழைய (demo) இருசக்கர வாகனத்தை புதியது என்று ஏமாற்றி விற்பனை செய்த ஷோரூம் உரிமையாளரால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில் தனியாருக்குச் சொந்தமான பிரபல புதிய இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது இங்கு, கடந்த மாதம் 6-ஆம் தேதி சென்னை, இராயபுரம், பி பிளாக், காசிபுரம், 4-வது தெருவை சேர்ந்த யாதேஷ்(24) என்பவர் புதிதாக விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கினார். அதற்கான பணம் முழுவதும் நிதி நிறுவனம் மூலம் செலுத்தப்பட்ட நிலையில், வண்டியை வாங்கிச் சென்ற நாள் முதல் தொடர்ந்து வண்டியில் கோளாறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வாகனத்தின் இன்ஜின் அலர்ட் சிக்னல் லைட்டும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்துள்ளது.
இது குறித்து ஷோரூம் நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் முறையாக பதில் அளிக்காமல் வேண்டுமென்றே அலைக்கழித்து உள்ளனர். தற்செயலாக வண்டி வாங்கும் முன் டெமோ ஓட்டிய வாகனத்தின் புகைப்படங்களை பார்த்த பொழுது இவருக்கு விற்பனை செய்யப்பட்ட வண்டியின் சேஸ் என்னும் டெமோ ஓட்டிய வாகனத்தின் சேஸ் என்னும் ஒன்றாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்பொழுதுதான் டெமோவிற்கு பயன்படுத்திய வாகனத்தையே தனக்கு விற்பனை செய்து விட்டார்கள் என்பதை அறிந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளான யாதேஷ், தன்னை ஏமாற்றிய நிறுவனம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மாதம் 12-ஆம் தேதி சங்கர் நகர் காவல் நிலையத்தில் மோசடி புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, ஷோரூம் நிறுவனத்தார் அது உபயோகப்படுத்தப்பட்ட பழைய (demo) வண்டி தான் என்பதை ஒப்புக்கொண்டனர். மேலும், யாதேஷிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தருவதாகவும் உறுதியளித்தனர். இந்த நிலையில், வெகு நாட்களாக ஆன போதும், தொடர்ந்து அந்த ஷோரூம் நிறுவனம் யாதேஷிற்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் சுமார் 50-க்கும் மேற்பட்ட யாதேச நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நிறுவனத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர். இது குறித்து யாதேஷ் மீண்டும் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சங்கர் நகர் குற்றப் பிரிவு போலீசார், அந்த ஷோரூமின் உரிமையாளர் விவேக், மேலாளர் செல்வகுமார், இன்சார்ஜ் தேவா, விற்பனையாளர் உள்ளிட்ட நான்கு பேர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.