சென்னையில் ரூ.27 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்! திமுகவின் மெத்தனம்- டிடிவி தினகரன்

 
TTV TTV

தமிழகத்தை போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை மையமாக மாற்றியிருக்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv dhinakaran

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் 27 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் - தமிழகத்தை போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை மையமாக மாற்றியிருக்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே 27 கோடி ரூபாய் மதிப்பிலான 2.7 கிலோ மெத்தபெட்டமைன் எனும் கொடியவகை போதைப் பொருளை பறிமுதல் செய்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இருவரை கைது செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

 

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் நாளுக்கு நாள் பெருகிவரும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் அதனை கட்டுப்படுத்தாமல் தமிழகத்தை போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை மையமாக மாற்றியிருக்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. கொடியவகை போதைப் பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்கவோ, பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் அவற்றை அடியோடு ஒழிக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, ஆண்டுதோறும் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியை மட்டும் ஏற்பது எந்தவகையிலும் பயனளிக்காது. எனவே, கும்பகர்ண தூக்கத்தில் இருந்து இனியாவது கண்விழித்து இளைய தலைமுறையின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை அடியோடு தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.