பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட முயற்சிப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது எனவும், தமிழகத்தின் வட மாவட்டங்களை பாலைவனமாக்கும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலாற்றின் குறுக்கே மீண்டும் தடுப்பணைகள் கட்டப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. திரு.சந்திரபாபு நாயுடு அவர்களின் இந்த அறிவிப்பு வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு வடமாவட்டங்களில் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பாலாற்றின் குறுக்கே அணை கட்டியேத் தீருவோம் என்ற பிடிவாதப் போக்குடன் செயல்பட்ட முந்தைய அரசின் பிடிவாதப் போக்கையே திரு.சந்திரபாபு நாயுடு அவர்களும் தொடர்வது, 1892 ஆம் ஆண்டு போடப்பட்ட மைசூருக்கும் சென்னைக்கும் இடையிலான நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை மீறுவதோடு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் முரணாக அமைந்திருக்கிறது. எனவே, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களின் நீர் ஆதாரத்தை கடுமையாக பாதிக்கும் பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் என ஆந்திர மாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்களை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.