தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசின் ஆணவப் போக்கு கண்டனத்திற்குரியது- டிடிவி தினகரன்

தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசின் ஆணவப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசின் ஆணவப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. இனியும் மவுனம் காக்காமல் உடனடியாக உச்சநீதிமன்றத்தை நாடி மாநிலத்தின் உரிமையையும், டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். தமிழகத்திற்கு நாள்தோறும் ஒரு டி.எம்.சி வீதம் காவிரி நீரை வழங்க வேண்டும் என்ற காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்த மறுப்பதோடு, தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்க முடியாது என கர்நாடக மாநில முதலமைச்சர் திரு.சித்தராமையா அவர்கள் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் தீவிரமடைந்திருக்கும் நிலையில், காவிரியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் உச்சத்தை எட்டிய பின்பும் தமிழகத்திற்கான காவிரி நீரை தர மறுப்பது கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகள் வரலாறு காணாத அளவிற்கு வறட்சியை சந்தித்து வரும் நிலையில், குறுவை சாகுபடியை தொடர்ந்து சம்பா சாகுபடியும் போதிய நீரின்றி பாதிக்கப்பட்டிருப்பதால் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
உச்சநீதிமன்றமும் காவிரி மேலாண்மை ஆணையமும் தெளிவான உத்தரவை பிறப்பித்த பின்பும் தமிழகத்திற்கான காவிரி நீரை பெற எந்த வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப் போக்கே, இன்றைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என அம்மாநில முதலமைச்சர் அவர்கள் ஆணவப்போக்குடன் கூறும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இனியும் கூட்டணி தர்மத்திற்காக மவுனம் காக்காமல், கர்நாடக அரசின் சட்டவிரோதப் போக்கை நீதிமன்றம் மூலம் எதிர்கொண்டு தமிழகத்திற்கான காவிரி நீரை உடனடியாக பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.