புதிய கட்டுமான திட்டங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் உயர்வு- டிடிவி தினகரன் கண்டனம்

 
TTV STALIN

தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணத்தை உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv dhinakaran

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்டட வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் இருமடங்காக உயர்த்தப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாக, தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புதிய கட்டுமானத் திட்டங்களை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் கூடுதல் அதிர்ச்சியை எற்படுத்துகின்றன. 

645 சதுர அடிக்கு மேற்பட்ட குடியிருப்புத் திட்டங்களுக்கு 10.7 சதுர அடிக்கு 20 ரூபாயாக இருந்த கட்டணம் 25 ரூபாயாகவும், வணிக கட்டடங்களுக்கு 50 ரூபாயாக இருந்த கட்டணம் 60 ரூபாயாகவும் உயர்த்தியிருப்பதோடு, கட்டுமான திட்ட முடிவு சான்றிதழ் பெறுவதற்கு 5 ஆயிரம் ரூபாய், கட்டுமானத் திட்டத்தை பதிவு செய்த நிறுவனம் அதனை திரும்பப் பெற விண்ணப்பித்தால் 10 சதவிகிதம் கட்டணம் பிடித்தம்  என அனைத்து வகையிலான கட்டணங்களும் உயர்த்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ttv

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டண உயர்வு என்பது சாதாரண குடியிருப்புகள் தொடங்கி அடுக்குமாடி கட்டடங்கள், வீட்டு மனைகளின் விலை உயர்வுக்கு மறைமுகமாக வழிவகுத்து சொந்த வீடு கனவில் இருக்கும் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.  எனவே, விளிம்பு நிலை மக்களுக்கான சொந்த வீடு கனவை முழுமையாக சிதைக்கும் வகையில் கடந்த மூன்றாண்டு காலமாக உயர்த்தப்பட்ட அனைத்துவிதமான வரிகள் மற்றும் கட்டண உயர்வுகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.