கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குக- டிடிவி தினகரன்

 
TTV STALIN

டெல்டா மாவட்டங்களில் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் நீரில் மூழ்கி சேதமடைந்திருக்கும் நெற்பயிர்களின் பாதிப்புகளை முறையாக கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

ttv dhinakaran

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக் கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின் படி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை தொடரும் பட்சத்தில் ஏக்கருக்கு சுமார்  30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர் சாகுபடி முழுமையாக  பாதிப்புக்குள்ளாகி பெரும் இழப்பை சந்திக்கக் கூடிய சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். 

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் போது பெய்யும் கனமழையால் விவசாய நிலங்களில் தேங்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்றும் வகையில் வடிகால்களை முறையாக தூர்வாரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிர்வாகம் அலட்சியாக எதிர்கொண்டதன் விளைவே நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.   எனவே, தொடர் கனமழையால் நீரில் மூழ்கி சேதமடைந்திருக்கும் நெற்பயிர்களை முறையாக கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு தொகையை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.