பழனிசாமி திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை; 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவிற்கு மூடுவிழா உறுதி- தினகரன்

 
ttv dhinakaran

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் நடைபெற்ற அமமுக ஒன்றிய இளைஞரணி செயலாளர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். 

ttv

அப்போது பேசிய டிடிவி தினகரன், “ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் வருங்காலத்திற்கு நல்லது, திமுகவை வீழ்த்துவதற்கு ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும். அதற்கு தடையாக இருப்பது யார் என்பது அனைவருக்கும் தெரியும், சுயநலத்தால் பதவி வெறியால் பணத் திமிறால், தான் தான் எல்லாம் என்கின்ற அகம்பாவத்தோடு பழனிச்சாமி செயல்படுவது தான் காரணம். பழனிச்சாமி என்ற சுயநல மனிதர் திருந்துவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை.  அங்கு உள்ள தொண்டர்களும் இரட்டை இலை எங்கிருக்கிறது, ஜெயலலிதாவின் கட்சி பெயர் எங்கே இருக்கிறது என்பதை பார்த்துக்கொண்டு தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டு பலவீனமாகி வருகின்ற ஜெயலலிதாவின் கட்சியில் தொடர்ந்து அவர்கள் நீடித்தார்கள் என்றால் 2026 தேர்தலிலும் பழனிச்சாமி படுதோல்வி அடைவது உறுதி. இரட்டை இலை சின்னத்தை காட்டி பண பலத்தால் மக்களை ஏமாற்றி விட முடியாது. 

2026 தேர்தல் வரை அங்கு உள்ள தொண்டர்களும் நிர்வாகிகளும் வாய் மூடி மௌனமாக இருந்தால் 2026 தேர்தலுக்குப் பிறகு பழனிச்சாமி அதிமுக கட்சிக்கு மூடு விழா நடத்தப் போவது உறுதி. அதனால் அங்கு உள்ள நிர்வாகிகள் விழித்துக் கொண்டு சரியான தீர்வு காணாத வகையில் அவர்கள் முயற்சி செய்யாத வரையில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்று இணைவதற்கு வாய்ப்பில்லை. அதேபோல் ஜெயலலிதா கட்சியில் உள்ள நிர்வாகிகளும் தொண்டர்களும் செயல்பட்டால் வரக்கூடிய தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி திமுகவையும் அதிமுகவையும் வீழ்த்தக்கூடிய நிலை உருவாகும்.  ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கட்சி தொடங்கக்கூடிய உரிமை உள்ளது. அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் ஜனநாயகத்தின் மன்னர்களாகிய மக்கள் கையில் தான் உள்ளது. 

ttv

திமுக அரசு ஏற்கனவே ஈர்த்த முதலீடுகளால் என்ன பலன் கிடைத்துள்ளது, எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்துள்ளது? எவ்வளவு தொழிற்சாலைகள் வந்து உள்ளது? என்பது தெரியாமல் இருக்கும் பொழுது தற்பொழுது முதலமைச்சர் மேற்கொண்டுள்ள வெளிநாடு பயணம் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாகத்தான் உள்ளது. இருப்பினும் போய் உள்ளார் வந்த பிறகு எவ்வளவு முதலீடு வருகிறது என்பதை பார்த்துக் கொண்டு கருத்து கூறலாம்.  திமுகவிற்கு மடியில் கனம் இருப்பதால் அவர்களுக்கு நிறைய பிரச்சனை இருப்பதால் இந்த நாடாளுமன்ற பண பலத்தால் வெற்றி அடைந்ததைப் போல வருகின்ற தேர்தலில் வெற்றி அடைய முடியாது என்பது தெரியும். அதனால் பாஜக முன்பு திமுக மண்டியிட்டு இருப்பதாகத்தான் பார்க்கிறேன். போதை கலாச்சாரத்தால் பாலியல் வன்கொடுமைகள் கொலைகள் அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இதை அரசாங்கம் சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் 2026 தேர்தலில் உரிய தண்டனை வழங்குவார்கள்” என்று தெரிவித்தார்.