விவசாயிகளுக்கு சிக்கல்.. பயன்பாட்டில் இல்லாத இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க உத்தரவு..

 
விவசாய மிண் இணைப்பு

விவசாய பயன்பாட்டில் அல்லாத இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில் தமிழக அரசு நடவடிக்கை  எடுத்துள்ளது.  

விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அதில் ஒன்றாக  விவசாயிகளுக்கு  இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்போது 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.  ஆண்டுக்கு  சுமார் 40 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் மின்சாரத்துறைக்கு வேளாண்மைத்துறை வழங்கி வருகிறது.  

இலவச மின் இணைப்பு

இந்த நிலையில்,  விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.  இதனால் விவசாய பயன்பாட்டில் அல்லாத இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  மாவட்ட வாரியாக ஆய்வு செய்து நீண்ட காலமாக விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளை கணக்கெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய  வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.