திருச்சி எஸ்.பி நோட்டீஸுக்கு விளக்கம் : கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நாதக நிர்வாகி..
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து, தன்னிச்சையாக விளக்கக் கடிதம் கொடுத்ததாக வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் சேவியர் ஃபெலிக்ஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து தன்னை பற்றி அவதூறாக பேசியதற்கு விளக்கம் கேட்டு திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமார், சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் சேவியர் ஃபெலிக்ஸ் , விளக்கமளித்து 16 பக்க கடிதத்தை திருச்சி மாவட்ட எஸ்.பிக்கு அளித்திருந்தார்.
இந்நிலையில் கட்சியின் தலைமையிடம் ஆலோசிக்காமல், தனிச்சையாக செயல்பட்டதாகக் கூறி சேவியர் ஃபெலிக்ஸ் தற்போது கட்சியில் இருந்து நிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ சென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த செ.சேவியர் பெலிக்ஸ் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதை அடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரைப்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.
நாம் தமிழர் கட்சி உறவுகள் இனி இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.