“சார் விடுங்க..” கத்தி கூச்சலிட்ட 13 வயது சிறுமி- போலீஸ் பூத்தில் வைத்து காவலர் செய்த கொடூரம்

சென்னையில் போலீஸ் பூத்தில் வைத்து பாலியல் தொந்தரவு அளித்த காவலர் மற்றும் காதலன் (வயது 16), சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த 25ஆம் தேதி சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் குறித்து 26 ஆம் தேதி காலையில் 13 வயது சிறுமியின் தாய் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவருடன் 16 வயது சிறுவன் ஒருவனும் வீட்டை விட்டு வெளியேறி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 16 வயது சிறுவனின் செல்போனை ஆய்வு செய்தபோது அந்த செல்போன் கடலூர் மாவட்டத்தில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று நேற்று 13 வயது சிறுமி மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும் சென்னை அழைத்து வந்தனர்.
சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்ட போது, 13 வயது சிறுமி 16 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. சிறுமியிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்ட போது, 13 வயது சிறுமி கடந்த 25-ஆம் தேதி இரவு மயிலாப்பூர் பகுதியில் உள்ள அவரது ஆண் நண்பரான 16 வயது சிறுவனின் வீட்டிற்கு சென்ற போது சிறுவனின் தாயார் சிறுமியை வீட்டுக்குள் அனுமதிக்காமல் தனது வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமி நள்ளிரவு நேரத்தில் தனியாக மயிலாப்பூரில் உள்ள தேவாலயம் அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக ரோந்து பணி காவலர் ஒருவர் வந்ததாகவும், அவர் தன்னை தனது தாயிடம் கொண்டு சேர்ப்பதாகவும் கூறி போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், போலீஸ் தன்னை, போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லும் பொழுது தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் பின் பட்டினம்பாக்கம் பகுதியில் உள்ள போலீஸ் பூத்தில் வைத்து தனக்கு மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை அளித்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் ராமன் தான் சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. மேலும், போக்குவரத்து காவலர் ராமனை அழைத்து வந்து சிறுமியிடம் அடையாளப்படுத்த கூறிய போது சிறுமியும் போக்குவரத்து காவலர் ராமன் என்பவரை அடையாளப்படுத்தியுள்ளார். இதனையடுத்து போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த போக்குவரத்துக் காவலர் ராமன், சிறுமியை கடலூர் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும் போக்சோ பிரிவின் கீழ் கைது செய்தனர்.
தொடர் விசாரணையில் சிறுவன் கடலூர் பகுதிக்கு சென்றிருப்பது சிறுவனின் தாய்க்கு தெரிய வந்த நிலையில் அவரும் போலீசாரிடம் உண்மையை மறைத்து சிறுவனுக்கு ஆதரவாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனின் தாயையும் மயிலாப்பூர். அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக 25-ஆம் தேதி போக்குவரத்து காவலர் ராமன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததும், அடுத்த நாள் காலையான 26 ஆம் தேதி 16 வயது ஆண் நண்பருக்கு சிறுமி கால் செய்து விபரத்தை கூறியுள்ளார்.
பின் 16 வயது சிறுவன், சிறுமியை 26 ஆம் தேதி காலை கடலூர் அழைத்துச் சென்று அங்கு இரண்டு நாட்கள் தங்கி இருந்ததும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையில் இரவு நேரத்தில் சாலையில் தனியாக நடந்து சென்ற 13 வயது சிறுமியை பாதுகாப்பு தருவதாக அழைத்துச் சென்று போக்குவரத்து காவலர் ராமன் பாலியல் தொல்லை அளித்து கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவமும், 13 வயது சிறுமியை 16 வயது சிறுவன் கடலூர் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமும், இதனால் போக்குவரத்து காவலர் ராமன், 16 வயது சிறுவன் மற்றும் சிறுவனின் தாய் ஆகிய மூவரும் போக்சோ பிரிவில் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியைபும் ஏற்படுத்தி உள்ளது.