பரனூர் சுங்கசாவடியில் போக்குவரத்து நெரிசல்- வாகன ஓட்டிகள் அவதி
சனிக்கிழமை வினாயகர் சதுர்த்தி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து இரண்டு நாட்கள் வார விடுமுறை காரணமாக ஏற்கனவே சென்னையில் இருந்து மக்கள் வெள்ளிக்கிழமை மாலையே தென் மாவட்டத்தை நோக்கி சென்று இருந்தனர்.
இரண்டு நாட்கள் வார விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் தென் மாவட்டத்தில் இருந்து மக்கள் சென்னை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் பல ஆயிரகணக்கான வாகனங்கள் குறிப்பாக கார், அரசு பேருந்து, ஆம்னி பேருந்து, ஆட்டோ, வேன் சென்னை நோக்கி வருவதால் 30 நிமிடங்களுக்கு மேலாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் சிக்கி தவித்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலால் பரனூர் முதல் புலிப்பாக்கம் வரை சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்க்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றது.
போக்குவரத்து நெரிசலை குறைக்க சுங்கசாவடி நிர்வாகம் வழக்கமாக ஆறு பூத்களில் வாகனங்களை அனுப்பி வைத்து வந்த நிலையில் கூடுதலாக ஒரு பூத் திறக்கப்பட்டு மொத்தம் ஏழு பூத்களில் வாகனங்கள அதிக அளவில் அனுப்பி வைத்து வருகின்றனர். வார விடுமுறை மற்றும் விழா காலங்களில் பரனூர் சுங்கசாவடியில் கூடுதலாக ஊழியர்களை நியமித்து காவலர்களை நியமித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.