ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று விவாதம்!
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கிளம்பினார். உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார். தேசிய கீதம் பாடவில்லை என கூறி அவர் சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார். இதனையடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.தமிழ்மொழி ராஜதத்தன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது. அ.தி.மு.க., வி.சி.க., காங்கிரஸ் சார்பில் தரப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.