இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 2.34 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி - சுகாதாரத்துறை தகவல்..

 
மாணவர்களுக்கு தடுப்பூசி

தமிழகத்தில் இன்று  ஒரே நாளில் 2.34 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதேபோல்  ஒமைக்ரான் வைரஸும்  தன் பங்கிற்கு  அச்சுறுத்தி வருகிறது. இதனால் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு  அனுமதியளித்திருக்கிறது. அதன்படி இன்று முதல் சிறார்களுக்கு  தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

மாணவர்களுக்கு தடுப்பூசி

 தமிழகத்தைப் பொறுத்தவரை 33 லட்சத்து 22 ஆயிரம் சிறார்களுக்கு  தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பள்ளிகளில் மட்டும் 26 லட்சம் மாணவ - மாணவிகளுக்கு தடுப்பூசி  செலுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டிருக்கிறது.   இந்த திட்டத்தை இன்று சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.  இதனையடுத்து தமிழகம் முழுவதும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன.

கொரோனா தடுப்பூசி

இந்த மாத இறுதிக்குள் சிறார்களுக்கு தடுப்பூசி  செலுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும்  2 லட்சத்து 34 ஆயிரத்து 175 சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இதில் அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 22 ஆயிரத்து 310 பேருக்கும், குறைந்தபட்சமாக  ராணிப்பேட்டையில்  ஆயிரத்து 886 பேருக்கும் தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது.  சென்னையில் 4 ஆயிரத்து 601 சிறுவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.