“வேலைக்கு லாயக்கில்லை, வாய்க்கும் குறைச்சலில்லை”- சேகர்பாபுவுக்கு பாஜக கண்டனம்

 
சேகர்பாபு

சாவகாசமாக சொகுசு காரில் வந்திறங்கி, அதிகாரமாக சிறப்பு பாதையில் இறைவனை சென்று தரிசிக்கும் உங்களுக்கு, அதே இறைவனைக் காண சாதாரண வரிசையில் மணிக்கணக்கில் கால் கடுக்க காத்திருக்கும் சாமானியனின் வலி எப்படி புரியும்? என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பாஜக தனது எக்ஸ் தள பக்கத்தில், “வேலைக்கு லாயக்கில்லை, வாய்க்கும் குறைச்சலில்லை அமைச்சர் திரு. சேகர்பாபு...திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வந்த பக்தர்களை எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி ஆட்டு மந்தையில் அடைப்பது போல 5 மணி நேரத்திற்கும் மேலாக அடைத்து வைத்து விட்டு, சிறு குழந்தைகள் பசியாலும் கூட்ட நெரிசலாலும் மயங்கி விழுவதைப் பற்றி துளியும் கரிசனமின்றி, அங்கே சிக்கித் தவிப்பவர்களைக் கண்டு “திருப்பதியில் 24 மணி நேரம் நிப்பான், இங்க நிக்க மட்டும் வலிக்குதா” என்ற தொனியில் மக்களை மட்டம் தட்டிய இந்து அறநிலையத் துறை அமைச்சரின் விட்டேத்தியான பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 


திருப்பதியில் நிற்பதற்கும் திருச்செந்தூரில் நிற்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு அமைச்சரே, நாங்கள் வரி கொடுப்பது உங்களுக்குத் தானே தவிர ஆந்திர அரசுக்கு அல்ல. “ஓட்டுப் போடுங்கள் ஓஹோவென விடியல் வரும்” என்று எங்களை நடித்து ஏமாற்றியது நீங்கள் தானே தவிர, ஆந்திராவின் அமைச்சர்கள் அல்ல. சாவகாசமாக சொகுசு காரில் வந்திறங்கி, அதிகாரமாக சிறப்பு பாதையில் இறைவனை சென்று தரிசிக்கும் உங்களுக்கு, அதே இறைவனைக் காண சாதாரண வரிசையில் மணிக்கணக்கில் கால் கடுக்க காத்திருக்கும் சாமானியனின் வலி எப்படி புரியும்? இவ்வாறு, பதவி பலத்தில் ஆணவத்தின் உச்சியில் தமிழக மக்களை வாய்க்கு வந்தபடி நக்கலடிக்கும் உங்கள் திமுக அரசு தலைவர்களின் அகம்பாவத்திற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் அமைச்சரே. ஆடும் வரை ஆடிக் கொள்ளுங்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.