“2 அமைச்சர் பதவி வாங்கிவிட்டால் காங்கிரஸ் வளர்ந்து விட்டதாக பொருளா..?”- டி.கே.எஸ். இளங்கோவன்

 
பணக்காரர்களுக்கு  புரோக்கர் வேலை செய்யும் கட்சி பாஜக - டி.கே.எஸ். இளங்கோவன்.. 

தவெக அமைச்சர்கள் பொய் பேசுகின்றனர். முதல்வர் தான் பத்திரிகையாளர்களை சந்தித்து உண்மையை கூறவேண்டும் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “காங்கிரஸ் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற பின் தவெகவுக்கு சென்றுவிட்டனர். இது சரியான அணுகுமுறை இல்லை. எங்கள் கூட்டணியில் போட்டியிடு, வெற்றி பெற்ற பின், உடனே காங்கிரஸ் தங்கள் நிலைபாட்டை உடனே மாற்றிக்கொள்வது முறையான செயல் அல்ல... காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக மற்ற கூட்டணி கட்சியினரும் வாக்கு சேகரித்தனர். இதனை மனதில் கொண்டு காங்கிரஸார் இந்த கூட்டணியில் நீடித்திருக்க வேண்டும், கருத்து மாறுபாடு வந்து பின் வேறு கூட்டணிக்கு செல்வது என்பது வேறு. ஆனால் உடனடியாக தேர்தல் முடிவுக்கு பிறகு, தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்காமல் சென்றது மற்ற கூட்டணி தலைவர்களைுயும் உருத்தியிருக்கிறது. அதற்காகவே INDIA ஆலோசனை கூட்டணி கட்சி கூட்டத்தில் திருமாவளவன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டுமென்றால் தனியாக போட்டியிட்டு, தங்களது பலத்தை காட்டி வளர்த்திருக்க வேண்டும். 2 அமைச்சர் பதவி வாங்கிவிட்டால் காங்கிரஸ் வளர்ந்து விட்டதாக பொருளா..? காங்கிரஸின் எதிரி பாஜக.. தமிழகத்தில் பாஜகவுக்கு போட்டியாக காங்கிரஸ் என்ன செய்தது..?  பாஜக கிராமம் கிராமமாக கொடி ஏற்றிய போது காங்கிரஸ் என்ன பாடுபட்டது.. ? தவெக அமைச்சர்கள் பொய் பேசுகின்றனர். முதல்வர் தான் பத்திரிகையாளர்களை சந்தித்து உண்மையை கூறவேண்டும். முதல்வர் பத்திரிக்கையாளர்களை சந்திக்க மாட்டேன் என சொல்வது தவறான ஒன்று” என்றார்.