இது தான் காஸ்ட்லியான ஸ்வீட்..! 1 கிலோ ஸ்வீட் வெறும் 36,000 ரூபாய் தானாம்..!

 
1 1

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் சந்தைக்கு வந்துள்ள ஸ்வீட் ஒன்று கிலோ 36,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த ஸ்வீட் மிகவும் அரிய வகை பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளதால் இந்த விலையாம். இந்த ஸ்வீட்டில் சாதாரண வகை பிஸ்தாக்கள் இல்லாமல், பிஷோரி பிஸ்தாக்கள் சேர்க்கப்படுகிறது. பச்சை நிறம் கொண்ட இந்த பிஸ்தா, அதீத சுவையுடன் ஊட்டச்சத்து மிகுந்ததாகவும் உள்ளது. அதிக புரதமும், நார்ச்சத்தும் கொண்ட இந்த வகை பிஸ்தா செடிகள் ஆப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு காஷ்மீரில் உகந்த இடங்களில் வளர்க்கப்படுகின்றன.

அதே போல, இந்த ஸ்வீட்டில் அரிதான மற்றும் மிகவும் சத்தான சில்கோசா கொட்டைகள் சேர்க்கப்படுகின்றன. காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானின் குளிர்ந்த நிலப்பரப்புகளில் உற்பத்தி செய்யப்படும் சில்கோசாவில் வைட்டமின் ஈ, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இவை உடலுக்கு ஆற்றலும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுவதாக கூறப்படுகிறது.

இவைகளுடன் தூய குங்குமப்பூ சேர்த்து ஸ்வீட்டின் மேற்பரப்பில் உண்ணக் கூடிய தங்கத் தாள்களும் பூசப்படுகிறது. அரிய பொருட்களுடன் அதீத சுவையுடன் தயாரிக்கப்படும் இந்த ஸ்வீட் கிலோ 36,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கடையின் உரிமையாளர் நவ்யா தெரிவிக்கிறார்.