நெருக்கடியைத் தீர்க்க இது எனது கடைசி முயற்சி - மம்தா உருக்கம்!
ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோல்கட்டாவில் போராட்டம் நடத்தும் டாக்டர்களை மம்தா பானர்ஜி சந்தித்தார்.
எங்களுக்கு நீதி வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பிய டாக்டர்களிடம், அவர் கூறியதாவது: உங்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து யாரேனும் குற்றவாளிகள் எனத் தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ‘திதி’யாக உங்களைச் சந்திக்க வந்தேன். முதல்வராக இல்லை. எனது பதவி பெரிதல்ல, மக்கள் பதவி பெரிது, நான் தூங்கவில்லை. நேற்றிரவு நீங்கள் அனைவரும் இந்தக் கனமழையில் போராட்டம் நடத்தினீர்கள். எனக்குத் தூக்கமே வரவில்லை.
போராட்டம் காரணமாக அரசு நடத்தும் அனைத்து மருத்துவமனைகளின் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைப் பார்ப்பதற்கு கவலையாக உள்ளது. நெருக்கடியைத் தீர்க்க இது எனது கடைசி முயற்சி. இவ்வாறு அவர் கூறினார். முதல்வர் அங்கிருந்து வெளியேறியபிறகு, போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள், பேச்சுவார்த்தை நடைபெறும் வரை தங்கள் கோரிக்கைகளில் சமரசம் செய்யத் தயாராக இல்லையெனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி குணால் கோஷ் கூறியதாவது: மாநில அரசுக்குக் கெட்டபெயர் ஏற்படுத்த போாரட்டம் நடத்தும் டாக்டர்கள்மீது தாக்குதல் நடத்த சிலர் திட்டமிட்டுள்ளனர். பின்னர் அவர்கள் மாநில அரசுமீது குற்றம் சாட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.