மஞ்சக்கொல்லை விவகாரம்: விசிக நிர்வாகிகள் 2 பேர் இடைநீக்கம்
மஞ்சக்கொல்லை விவகாரத்தில் விசிக நிர்வாகிகள் 2 பேர் இடைநீக்கம் நீக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர் சில நாட்களுக்கு முன்பு தமது சகோதரியின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுத்து விட்டு, பு.உடையூர் என்ற கிராமத்தின் வழியாக சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர் வழியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். வழியை விட்டு ஒதுங்கி நின்று மது அருந்தும்படி செல்லத்துரை கூறியதால் ஆத்திரம் அடைந்த 15-க்கும் மேற்பட்டோர் அடங்கிய அந்த கும்பல், கட்டைகளாலும், மதுபாட்டில்களாலும் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அந்த கும்பலின் கொலைவெறித் தாக்குதலில் தலை, முகம், உடல் என அனைத்து இடங்களிலும் காயமடைந்து, ரத்தம் வழியும் நிலையில் செல்லத்துரை மயங்கி விழுந்துள்ளார். அப்போதும் கொலைவெறி அடங்காத கும்பல், அவரை கால்களால் எட்டி உதைத்தும், அவரது சட்டையில் உள்ள வன்னியர் சாதி சின்னத்தை மிதித்தும், அவதூறாக பேசியும் இழிவுபடுத்தியுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்லத்துரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரது சொந்த ஊருக்கு சென்ற வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியும், பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வமகேஷும் செல்லத்துரையின் குடும்பம் மற்றும் ஊர்மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள். இது மனிதநேயத்தின் அடிப்படையில் அனைவரும் செய்யக் கூடிய ஒன்று தான். இது பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளின் முதன்மைக் கடமையும் ஆகும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், புவனகிரியில் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கூட்டத்தைக் கூட்டி வன்னிய மக்களையும் இழிவு படுத்தும் வகையில் பேசியுள்ளனர். வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா. அருள்மொழி அவர்களின் தலையை வெட்டி எடுப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, ‘‘தமிழ்நாட்டில் இப்போது நடப்பது திருமா காலம். இன்னும் 42 ஆண்டுகளுக்கு வன்னியர்களை நாங்கள் அடித்துக் கொண்டு தான் இருப்போம். அவர்கள் வாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும்’’ என்று கொக்கரித்திருக்கின்றனர்.
இச்செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலயில், கட்சியின் பெயருக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பேசியதாக விசிக நிர்வாகிகள் 2 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் வ.க.செல்லப்பன் மற்றும் மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில துணைச் செயலாளர் செல்வி முருகன் 3 மாதங்களுக்கு நீக்கம் செய்யப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.