“பாஜகவுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டும்”- திருமாவளவன்

 
திருமாவளவன்

மகாராஷ்டிரா - ஜார்கன்ட் மாநிலத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிதறவிடாமல் ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது என விசிக எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவிலுள்ள வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான  இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள திருமதி பிரியங்கா காந்தி அவர்களுக்கும்;  ஜார்கண்ட் மாநிலத்தின்ல்: மீண்டும் ஆட்சி அமைத்துள்ள ஹேமந்த் சோரன் அவர்களுக்கும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  வயநாடு இடைத்தேர்தலில் திரு. ராகுல் காந்தி அவர்கள் பெற்றதை விடக் கூடுதலாக வாக்குகள் பெற்று மகத்தான வெற்றியும் திருமதி பிரியங்கா காந்தி அவர்கள் ஈட்டியுள்ளார். நாடாளுமன்ற மக்களவைக்கு அவர் வரப்போவது இந்தியா கூட்டணிக்கு மேலும் வலிமையைத் தரும். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் அவர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டு ஒன்றிய பாஜக அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. குறுக்கு வழியில் அவரது முதலமைச்சர் பதவியைப் பறித்தது. இந்தச் சதிகளையெல்லாம்  தாண்டி  மக்கள் ஆதரவோடு ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறார். பழங்குடி மக்களின் மகத்தான தலைவரான ஹேமந்த் சோரனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  மகாராஷ்டிரா மாநிலத்தில் தலித் வாக்குகள் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. தலித் வாக்குகள் இந்தியா கூட்டணிக்குச் செல்லாமல் சிதறடிக்கும் விதமாக எல்லா தொகுதிகளிலும் செல்வி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும்,  பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான விபிஏ  கூட்டணியும் வேட்பாளர்களை நிறுத்தின.  பாஜக கூட்டணி,  காங்கிரஸ் கூட்டணி இரண்டையும் எதிர்ப்பதாக அவர்கள் சொல்லிக் கொண்டாலும் "பாஜகவுக்கு ஆதரவாகத் தலித் வாக்குகளைப் பிரிப்பதற்குத் தான் அவர்கள் வேட்பாளர்களை நிறுத்தினார்கள்" என்னும் விமர்சனம் பரவலாக உள்ளது. இது அறிந்தோ அறியாமலோ பாஜக வுக்குத் துணைபோகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

திருமாவளவன்

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றியை அது பெற்றுள்ளது. “ இந்த வெற்றி மோடி -அமித்ஷா- அதானி கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி” என உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ராவத் கூறியிருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஏனெனில், அங்கு நாண்டேட் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அந்த மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளையும் பாஜக வென்றுள்ளது.இது ‘மகராஷ்டிராவில் முறைகேடான விதத்தில்தான் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது’ என்ற குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிறது. இதைப் பற்றித் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், இம்முடிவு பாஜகவுக்கு எதிரான வாக்குகளைச் சிதறவிடாமல், குறிப்பாக, தலித் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை  எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.