தமிழ்நாட்டில் தலித் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் - திருமாவளவன்

 
‘திருமாவளவன்

தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதை உளவுத்துறை கண்டறிந்து உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என திருமாவளவண் கேட்டுக்கொண்டுள்ளார்.  

தமிழக ஆந்திரா எல்லையான அழகிரிப்பேட்டையில் புரட்சியாளர் அம்பேத்கரின் மார்பளவு திருவுருவச் சிலையையும், விசிக கட்சியின் தலைமை நிலைய செயலாளர்   பாலசிங்கம்  அவர்களின்  தாயாரின் திருவுருவப் படத்தையும் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  உத்தரபிரதேசத்தில் உட்கட்சி பூசல்  காரணமாக  யோகி ஆதித்யநாத்திற்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாகவும், நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் உத்திர பிரதேசத்தில் உட்கட்சி  பூசல் நிலவி வருவதால் இந்தியா கூட்டணிக்கு சாதகமான சூழல் கனிந்து வருவதாகவும் கூறினார். 

ஆம்ஸ்ட்ராங் கொலை

மேலும், உட்கட்சி பூசல் உத்தரபிரதேசத்துடன் நிற்காமல் தேசிய அளவில் பாஜவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும், இதனால் உத்திர பிரதேசத்திலும், மத்தியிலும் பாஜக  5 ஆண்டுகள் நிலையான ஆட்சி  தருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், நாட்டில் இந்திய கூட்டணிக்கு மக்கள் சாதகமாக திரும்பி கொண்டு  இருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கை சிறையில்  உள்ள தமிழக மீனவர்களையும்  அவர்களின்    படகுகளை  விடுவிக்க  ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து அழுத்தம் தரப்படும் எனவும், ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

இதனைத்தொடர்ந்து நாளை  திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மறைந்த ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கு  நினைவஞ்சலி பேரணியில் கலந்து கொள்வது குறித்து பேசி முடிவு செய்து பின்னர் அறிவிப்போம் என்றார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என தொடக்க முதலில் இருந்து சொல்லி  வருவதாகவும்,  அவரின்  கொலை வழக்கு முழுமையாக விசாரணை மேற்கொண்டு  கொலையாளிகளை ஏவியவர்கள் யார் முழுமையாக கண்டறிந்து  போலீசார்  கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

மேலும்,  தமிழ்நாட்டில் தன் உயிருக்கு  பாதுகாப்பு இல்லை எனக்கூறிய ஜான் பாண்டியன் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,  தமிழ்நாட்டில் எந்த தலித் தலைவருக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதை உளவுத்துறை கண்டறிந்து உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றார்.