இளம்பெண் ஜோடி சேர்ந்து வாழ தடையில்லை..!

 
1

விஜயவாடாவை சேர்ந்தவர் ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  இவரும் சீதாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஓரினச்சேர்க்கை ஆர்வலர்கள் என்று கூறப்படுகிறது. விஜயவாடாவில் உள்ள ராதாவின் பெற்றோர் வீட்டில் ஒரு வருடமாக ஒன்றாக வசித்து வருகின்றனர். இதற்கிடையில், செப்டம்பர் மாதம், சீதாவின் பெற்றோர் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ராதா விஜயவாடா போலீசில் சீதா காணாமல் போனதாக புகார் அளித்தார். போலீசார் சீதாவை அவரது பெற்றோர் வீட்டில் கண்டுபிடித்து மீட்டனர்.

தனக்கு 18 வயது நிறைவடைந்ததாகவும், துணையுடன் வாழ விரும்புவதாகவும் சீதா போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால், போலீசார் உடனடியாக இருவரும் சேர்ந்து வாழ அனுமதிக்கவில்லை. போலீசார் சீதாவை 15 நாட்களாக நலவாரியத்தில் தங்க வைத்தனர். இந்நிலையில், சீதாவும் தனது பெற்றோர் தன்னை துன்புறுத்துவதாக போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் போலீசார் தலையிட்டனர். அதன் பிறகு சீதா விஜயவாடா திரும்பினார். வேலைக்குச் சென்றவர், ராதாவை அடிக்கடி சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் சீதாவை அவரது தந்தை மீண்டும் வாகனத்தில் ஏற்றி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது தோழி சீதாவை ஆஜர்படுத்தக் கோரி, அமராவதியில் உள்ள ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில், ராதா மனு தாக்கல் செய்தார். அந்த ரிட் மனுவில்,  தந்தை சீதாவை நர்சிபட்டினத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த அமராவதியில் உள்ள ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரகுநந்தன் ராவ், மகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு, சீதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து விஜயவாடா போலீசார் சீதாவை ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதிகளிடம் சீதா, ராதாவுடன் வாழ விரும்புவதாகவும், அனுமதித்தால், பெற்றோர் மீதான புகாரை வாபஸ் பெறுவதாகவும் கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஒரே பாலின தம்பதிகளான ராதா - சீதாஇருவரும் சேர்ந்து வாழ உரிமை உண்டு எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர். 18 வயது நிறைவடைந்த சீதாவுக்குத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என்றும், சீதாவின் வாழ்க்கையில் அவரது பெற்றோர்கள் தலையிடக் கூடாது என்றும் ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். சீதா போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெற விரும்புவதால், சீதாவின் பெற்றோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல்துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.