கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
தேனியில் கிரிக்கெட் விளையாடிய ராணுவ வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் கண்ணுடையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பரமன். இவரது மகன் பால்பாண்டி (வயது 28). இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார். தற்போது ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இராணுவ வீரராக பணியில் உள்ளார்.
இந்நிலையில் விடுமுறைக்காக கடந்த மாதம் 21ம் தேதி கம்பத்திற்கு வந்தார். நேற்று முன்தினம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு பந்து வீசிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடிரென வியர்த்து கொட்டியது. சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பதிரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பால்பாண்டி உயிரிழந்தார். கிரிக்கெட் போட்டியில் விளையாடி கொண்டிருந்த போது திடிரென மயங்கி விழுந்த இராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பால் பாண்டி சொந்த ஊர் வருசநாடு அருகேயுள்ள தும்மகுண்டு என்பதும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கம்பத்திற்கு குடிபெயர்ந்தது குறிப்பிடதக்கது.