நண்பனின் இரு குழந்தைகளையும் கொன்ற இளைஞர்! மனைவியுடன் சேர்த்து வைக்காததால் ஆத்திரம்

 
agg

குடியாத்தம் அருகே நண்பனின் குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று கொலை செய்த பட்டதாரி பில்டிங் காண்ட்ராக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சிங்கில்பாடி ஏரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிட காண்ட்ராக்டர் வசந்த்குமார் என்பவரும், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் வடிவேல் நகர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான யோகராஜ் என்பவரும் நண்பர்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டிட கான்ட்ராக்டர் வசந்த்குமார் என்பவருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் திருமணமான நிலையில், மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை வசந்தகுமார் மாதனூர் பகுதியில் உள்ள கட்டிட தொழிலாளியான நண்பர் யோகராஜ் நிலத்திற்கு சென்று அங்கே யோகராஜிடம் பேசிவிட்டு அவருடைய வீட்டிற்க்கு சென்று நண்பன் யோகராஜ் மனைவியிடம் பிள்ளைகளை யோகராஜ் அழைத்து வர சொன்னதாக கூறி யோகித் (5 வயது), தர்ஷன் (4வயது) ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். பல மணி நேரம் ஆகியும் வசந்தகுமார் வராததால் சந்தேக அடைந்த பெற்றோர், அவர் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து யோகராஜ் உறவினர்களுடன் சென்று ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அனைத்து காவல்துறையினருக்கும் வாக்கி டாக்கி மூலம் இரண்டு சிறுவர்களை இருசக்கர வாகனத்தில் நண்பனே கடத்தி சென்றுள்ளதாக தகவலை தெரிவித்தின் அடிப்படையில் காவல்துறையினரும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும் வசந்தகுமாரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சிங்கில்பாடி ஏரிப்பட்டி கிராமத்தில் செல்போன் டவர் மூலம் வசந்த்குமார் இருப்பதாக போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து சிங்கல்பாடி எரிப்பட்டி கிராமத்தில் உள்ள கோவில் பின்புறத்தில் இரண்டு ஆண் சிறுவர்களின் பிரேதங்கள் இருந்துள்ளன. அருகில் வசந்தகுமார் அமர்ந்து இருந்துள்ளார். பொதுமக்களை பார்த்தவுடன் வசந்தகுமார் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து கிராம மக்கள் குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே குடியாத்தம் மற்றும் ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  சிறுவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் அந்தப் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டதில் விவசாய நிலத்தில் இருசக்கர வாகனம் ஒன்று இருப்பதாக கிராம மக்கள் கூறிய நிலையில,  போலீசார் அந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அங்குள்ள விவசாய நிலம் மற்றும் வீடுகளில் பொதுமக்கள் உதவியுடன் கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தேடுதலின் போது வசந்தகுமார் தனது பாட்டி வீட்டில் கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்துள்ளார். அவரை காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து ஆம்பூர்  கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையிலான குடியாத்தம் டிஎஸ்பி ராமச்சந்திரன் மற்றும் ஆம்பூர் டிஎஸ்பி அறிவழகன்  உள்ளிட்ட காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

முதல் கட்ட விசாரணையில்  கொலையாளி வசந்தகுமார் மனைவியை பிரிந்து ஒரு மாதமாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், நண்பனை மனைவியை சேர்த்து வைக்க கோரியுள்ளார். அதற்கு நண்பன் யோகராஜ் உன்னுடைய குடும்ப பிரச்சனையில் நான் தலையிடுவதில்லை என்று கூறியதால் ஆதாரத்தில் அவருடைய பிள்ளைகளை அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்கு மூலம் கொடுத்ததாக தெரிகிறது. கொலையான சிறுவர்களின் உறவினர்கள் கூறுகையில் கோவில் அருகாமையில் சிறுவர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளதால் சிறுவர்களை நரபலி கொடுத்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.