விடுமுறை முடிந்தது.. சொந்த ஊர்களுக்கு திரும்பும் மக்கள்.. வாகனங்களால் ஸ்தம்பித்த டோல்கேட்..
விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து பலரும் சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதால், செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டி ஆக.14 முதல் ஆக.18 வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனையொட்டி கல்வி மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருந்த பலரும் அவரவர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதற்காக சென்னை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளும் இயக்கப்பட்டன. பொது போக்குவரத்து மற்றும் சொந்த வாகனங்களை பயன்படுத்தி பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்ததால், கடந்த 14ம் தேதி மாலை மற்றும் 15ம் தேதிகளில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல் 4 நாட்கள் விடுமுறை முடிந்து பலரும் மீண்டும் சென்னை திரும்புவதால் இன்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு ஆத்தூர் டோல்கேட்டில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிகளுக்குச் செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.