வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ.2,629 கோடி வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்ட தமிழக அரசு

 
mkstalin

வடகிழக்கு பருவ மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த சென்னை வந்த ஒன்றிய குழுவினர் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசுத் துறை செயலாளர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது தமிழகத்திற்கு வெள்ள பாதிப்பு நிவாரணமாக 2629 கோடி ரூபாய் வழங்குமாறு தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. 

வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வந்தது || Rain  flood affected central team came to chennai for review

வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால், குடியிருப்பு பகுதிகளிலும், வயல்வெளிகளிலும் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்தது. பின்னர் இந்த அறிக்கையை ஒன்றிய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் வழங்கினார்.

இதை தொடர்ந்து, தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய ஒன்றிய உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில், ஒன்றிய நிதித்துறை செலவின பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல், ஒன்றிய வேளாண்மைத்துறை பிரிவு இயக்குனர் விஜய் ராஜ்மோகன், சென்னையில் உள்ள ஒன்றிய நீர்வள அமைச்சகத்தின் நீர் ஆணையத்தின் இயக்குனர் ஆர்.தங்கமணி, டெல்லியில் உள்ள ஒன்றிய எரிசக்தித்துறை உதவி இயக்குனர் பாவ்யா பாண்டே, சென்னையில் உள்ள ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மண்டல அதிகாரி ரணஞ்செய் சிங், ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை சார்பு செயலர் எம்.வி.என்.வரப்பிரசாத் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இன்று பிற்பகல் சென்னை வந்தடைந்த ஒன்றியக் குழுவினர், தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், வருவாய்த் துறை, மின் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை, வேளாண்துறை, நிதித்துறை, ஊரக உள்ளாட்சி துறை, சுகாதாரம் உள்ளிட்ட துறைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள், புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் மூலமாக ஒன்றிய குழுவிற்கு விளக்கப்பட்டது. இதில், குறிப்பிட்ட நாட்களில் 521% மழை அதிகமாக பெய்ததாகவும், சென்னையில்  778 இடங்களில் மழை நீர் தேங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

தமிழகம் முழுவதும் 1,236 கிராமங்கள் பாதிக்கப்பட்டதாகவும், 49,900 பொதுமக்கள் மீட்கப்பட்டதாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி 100 மி.மீ மழையும், 13ம் தேதி 109 மி.மீ மழையும் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டது.    713 கி.மீ தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டதாகவும், 624 கி.மீ நகராட்சி சாலைகள் பாதிக்கப்பட்டதாகவும், 39 அரசு கட்டிடங்கள் பாதிப்பிற்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக  தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.2629 கோடி வழங்க வேண்டுமெனவும் கோரப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து, சென்னை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய ரிப்பன் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றனர். இந்தக்குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் ஒரு குழுவும், கன்னியாகுமரியில் ஒரு குழுவும் நாளை ஆய்வு செய்ய உள்ளனர். நாளை மறுநாள் கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் ஒரு குழுவும், வேலூர், ராணிப்பேட்டையில் மற்றொரு குழுவும் ஆய்வு செய்யவுள்ளது. 

பாதிக்கப்பட்ட பகுதிகள் பற்றிய விவரங்களை குறிப்பு எடுத்து மத்திய குழுவை அழைத்து செல்லுமாறும், பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை கட்சி வேறுபாடின்றி செய்யவேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ஆய்வுக்குழுவினர் தங்கள் ஆய்வை முடித்துக்கொண்டு வரும் 24ம் தேதி முதலமைச்சரை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.