கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்- வீடியோ வெளியாகி பரபரப்பு

 
அக்

திருக்கோவிலூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்த வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது திம்மச்சூர் கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 112 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மதியம் உணவு இடைவேளையின் போது மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்ததாக அப்பகுதியில் உள்ள சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்கள் சுத்தம் செய்ததாக சொல்லப்பட்ட கழிவறையை பூட்டி உள்ளார். 


இது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது உணவு இடைவேளையின் போது பள்ளி மாணவிகள் அங்கு சென்று, கை கழுவுவது வழக்கம் எனவும் அவ்வாறு சென்ற போது எங்களுக்கு தெரியாமலேயே கழிவறையை அவர்கள் சுத்தம் செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து வட்டார ஆரம்ப கல்வி அலுவலரிடம் கேட்டபோது இவர் மீது இதே போன்ற புகார் பலமுறை எழுந்துள்ளதும் தாங்கள் எச்சரித்ததாகவும் கழிவறை சுத்தம் செய்வதற்கான தனியாக பணியாள் அமைத்து அதற்கென சம்பளமும் கொடுப்பதாகவும் ஆனால் இது போன்ற செயலில் இவர் ஈடுபட்டுள்ளார் என்பதால் நாளைய தினம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.