மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி

 
rn ravi

தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 
 
சேத்துப்பட்டில் உள்ள KTCT பெண்கள் மேல்நிலைபள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய ஆளுநர் ரவி, “பெண் சக்தி தான் இந்த நாட்டை முன்னேற்றுகிறது. பெண்களால் இந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது.  நமது ஆன்மீகத்தையும்,  கலாச்சாரத்தையும் காலனிய ஆதிக்கம் ஒடுக்கியது. ஆனால் சத்தியமும் தர்மமும் தான் வென்றது. இந்த நாடு தர்மத்தை கொண்டு வளர்ந்தது. ஆரம்பத்தில் நமது நாடும் பொருளாதாரத்தில் முன்னேறி 6வது இடத்தில் இருந்தது. ஆனால் நல்ல வழிகாட்டுதல் இல்லாததால் 11வது இடத்திற்கு பின் தங்கினோம். கடைசி 10 வருடத்தில் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. உலகமே இந்தியாவின் ஆற்றல், திறனை திரும்பிப் பார்க்கிறது.   எந்த ஒரு பிரச்சனைக்கும் இந்தியாவின் ஆலோசனை கேட்கப்படுகிறது.  

பள்ளி மாணவர்கள்

2047ம் ஆண்டில் 100வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடும்போது, இந்தியா முழுமையாக வல்லரசு பெற்று விளங்கும். அதற்கு பெண் சக்தியின் பங்களிப்பு மிக அவசியம். ஒவ்வொரு வீட்டிற்கும் பெண்களே முதுகெலும்பாக இருக்கிறார்கள். அதே போல் நாட்டிற்கும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். நம் நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்த 25 வருடம் மிகவும் முக்கியமானது. தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது  மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது. 

நான் பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் பேசினேன். அவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றைப் பற்றியான அறிவுத்திறன் குறைவாக உள்ளது என்றார். மேலும், 53 கோடி பெண்கள் பிரதம மந்திரியின் ஜன் தன் திட்டத்தில் பங்கேற்று பயன் பெறுகிறார்கள்.  தமிழ்நாட்டில் கடந்த மூன்று வருடங்களில் 1.2 கோடி பேர் முந்திரா கடன் பெற்றிருக்கிறார்கள். அடுத்த 20 வருடங்களில் இளைஞர்களின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இந்த நாட்டின் வளர்ச்சியில் பங்கு வகிக்கும். கடுமையாக உழைத்தால் நமது கனவுகளை அடைய முடியும்” என்று பேசினார்.