மக்களுக்கு அடுத்த ஷாக்..! கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!!
எல்.பி.ஜி டேங்கர் லாரிகளுக்கு 2025-30 ஆண்டுக்கான புதிய டெண்டர் அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டது. இதில் 3,500 டேங்கர் லாரிகள் வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே பணிக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.
இந்த புதிய விதிமுறைகளால், பாரபட்சமாக லாரிகளுக்கு டெண்டர் விடுவதாகவும், இதனால் ஆயிரம் எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கு வேலை கிடைக்காத சூழல் உள்ளதாக கூறி, தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த 9-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எல்பிஜி டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் பங்கேற்றுள்ளார்கள்.
எண்ணெய் நிறுவனங்களின் இந்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும், அனைத்து எல்பிஜி டேங்கர் லாரிகளும் ஒப்பந்தத்தில் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் நான்காவது நாளாக எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று அல்லது நாளை சென்னையில் எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக, எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இவர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் எல்பிஜி டேங்கர் லாரிகள், சமையல் எரிவாயு பிளாண்டுகளுக்கு செல்லாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்கள் வேலைநிறுத்தம் தொடர்ந்தால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் சமையல் கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


